கோத்தா கினபாலு – கினபாலுவில் உள்ள செயிண்ட் ஜான்ஸ் சிகரத்தில், சூரிய ஒளியின் போது, ‘முகம்’ ஒன்று தெரிவதாக அண்மையில் வெளியான புகைப்படம் ஒன்று மலையேற்ற வீரர்களையும், நட்பு ஊடகங்களில் இருப்பவர்களையும் திடுக்கிட வைத்துள்ளது.
இது குறித்து கினபாலு பூங்காவின் நிர்வாகி யாசின் மிக்கி கூறுகையில், சில நேரங்களில் சூரிய ஒளி பரவும் போது, அந்த முகம் மிகத் தெளிவாகத் தெரியும் என்று தெரிவித்துள்ளார்.
“சூரியஒளி பரவிய பின்பு தான் அந்த முகம் தெளிவாகத் தெரியும்” என்று நேற்று கூறியுள்ளதாக ‘தி ஸ்டார்’ தெரிவித்துள்ளது.
அந்த ‘முகத்தில்’ கண், மூக்கு, வாய் எல்லாம் இருப்பதாக சில தரப்பினர் கூறி வருகின்றனர்.
எனினும், கடந்த ஆண்டு நிலநடுக்கம் ஏற்படுவதற்கு முன்பே, அந்த முகத்தைப் பார்க்க முடிந்தது என்று யாசின் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஏற்பட்ட நிலநடுக்கத்தில், கினபாலுவில் மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த 18 பேர் மரணமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.