கோலாலம்பூர் – நேற்று சனிக்கிழமை நடைபெற்ற பெர்சே பேரணியைத் தொடர்ந்து நடத்தப்பட்ட கைது வேட்டையில் பிகேஆர் கட்சியைச் சேர்ந்த பத்து நாடாளுமன்ற உறுப்பினர் தியான் சுவா, அம்பாங் நாடாளுமன்ற உறுப்பினர் சுரைடா கமாருடின் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மலேசியக் குற்றவியல் சட்டம் (பீனல் கோட்) பிரிவுகள் 147, மற்றும் 511 ஆகியவற்றின் கீழ் தான் கைது செய்யப்பட்டிருப்பதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்த தியான் சுவா, தற்போது ஜாலான் ஹாங் துவாவில் உள்ள கோலாலம்பூர் காவல் துறை தலைமையகத்தின் 7-வது மாடியில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
குற்றவியல் சட்டத்தின் 147, 511 பிரிவுகள் ஆர்ப்பாட்டங்கள், கலகங்கள் விளைவிப்பதை குற்றமாக்குகின்றது.
அம்பாங் நாடாளுமன்ற உறுப்பினர் சுரைடா கைது செய்யப்பட்டுள்ளதை பிகேஆர் கட்சியும் உறுதிப்படுத்தியுள்ளது.
நேற்று மாலை 6 மணியளவில் பெர்சே 5 பேரணி நிறைவடைந்ததைத் தொடர்ந்து சமூகப் போராளி ஃபாமி ரெசா என்பவரும் கைது செய்யப்பட்டார்.
சிவப்பு சட்டை அணியினர், பெர்சே அணியினர் என இரு தரப்பிலும் சிலர் கைது செய்யப்பட்டனர். அவர்களில், 33 வயதான ஒருவர் பாராங் கத்தியும், கைவிரலில் பொருத்தும் உலோகத்தால் ஆன ஆயுதம் (brass knuckle) ஒன்றையும் வைத்திருந்தார்.
பெர்சே பங்கேற்பாளர் ஒருவரைத் தாக்கிய சிவப்பு சட்டைக்காரர் ஒருவரையும், மேலே பறக்கும் சிறிய விமானம் (drone – பொதுவாக புகைப்படம் எடுப்பதற்கும் கண்காணிப்பதற்கும் பயன்படுத்தப்படுவது) ஒன்றை வைத்திருந்த ஒருவரையும் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
பாசீர் பிஞ்சி சட்டமன்ற உறுப்பினர் ஹோவார்ட் லீ சுவான் ஹாவ்-வும் கைது செய்யப்பட்டவரில் ஒருவராவார்.