முத்து நெடுமாறன் செல்லினம் குறுஞ்செயலி மற்றும் முரசு அஞ்சல் மென்பொருள் ஆகியவற்றின் வடிவமைப்பாளரும், உருவாக்குநரும் ஆவார்.
செல்லியல் ஊடக குறுஞ்செயலியின் இணை தோற்றுநரும், தொழில் நுட்ப வடிவமைப்பாளருமான முத்து நெடுமாறன், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பிப்ரவரி 26-ஆம் நாள் கொழும்புவில், உத்தமம் எனப்படும் உலகத் தமிழ்த் தகவல் தொழில் நுட்ப மன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் ‘மின்னுட்பக் கருவிகளில் தமிழ்ப் பயன்பாடு’ என்ற தலைப்பிலான பயிலரங்கில் கலந்து கொண்டு தனது கருத்துகளையும், சில செயல்முறை விளக்கங்களையும் வழங்குவார்.
முத்து நெடுமாறன் உத்தமம் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டதில் முக்கிய பங்காற்றியவர் என்பதோடு, அந்த அமைப்பு தோற்றுவிக்கப்பட்டபோது முதலாவது உதவித் தலைவராகப் பணியாற்றியவராவார்.
உத்தமம் அமைப்பின் தமிழ் தகவல் தொழில்நுட்பம் மீதான அனைத்துலக மாநாட்டின் தலைவராகவும் முத்து நெடுமாறன் பணியாற்றியிருக்கின்றார்.