வாஷிங்டன் – வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னைத் தான் சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் அது தனக்குக் கிடைத்த பெருமை என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருக்கிறார்.
எந்த நேரத்திலும் வடகொரியா அணு ஆயுதப் பரிசோதனைகளை நடத்தக் கூடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதன் அண்டை நாடுகளில் பதற்ற நிலை நீடித்து வருகின்றது.
வடகொரியாவின் இந்த நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த அமெரிக்கா தனது படைகளை அனுப்பி போர் அச்சுறுத்தல் ஏற்படுத்தியும் கூட வடகொரியா அதற்குக் கட்டுப்படவில்லை.
இந்நிலையில் டிரம்பின் இந்த வழக்கத்திற்கு மாறான புகழ்ச்சி உலக நாடுகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
“அவருடன் நான் சந்திப்பு நடத்தப் பொருத்தமான நேரம் அமையுமானால், நிச்சயமாக அதனைச் செய்வேன். அதைச் செய்வதில் நான் பெருமையடைகின்றேன்” என்று ப்ளூம்பெர்க் நியூஸ் செய்தி நிறுவனத்திடம் டிரம்ப் கூறியிருக்கிறார்.