பத்துமலை – 2017-ஆம் ஆண்டில் யுபிஎஸ்ஆர் தேர்வு எழுதும் மாணவர்கள் தமிழ் மொழி பாடத்தில் சிறப்பாகத் தேர்ச்சி பெற உதவும் நோக்கத்தில் வெளியிடப்பட்டிருக்கும் “தமிழ்மொழி தேர்வு வழிகாட்டி” நூலை சிலாங்கூர் மாநிலத்திலுள்ள அனைத்துத் தமிழ்ப் பள்ளிகளின் யுபிஎஸ்ஆர் மாணவர்களுக்கும் இலவசமாக வழங்க ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் தேவஸ்தானம் ஏற்பாடுகள் செய்துள்ளது.
மாணவர்களுடன் தேவஸ்தானத் தலைவர் டான்ஸ்ரீ நடராஜா…
இதற்கான நிகழ்ச்சி இன்று வெள்ளிக்கிழமை காலை 11.30 மணியளவில் பத்துமலை ஆலய மண்டபத்தில் மாரியம்மன் ஆலயத் தலைவர் டான்ஸ்ரீ ஆர்.நடராஜா தலைமையில் நடைபெற்றது. முதல் கட்டமாக பத்துமலை தமிழ்ப் பள்ளியின் யுபிஎஸ்ஆர் மாணவர்களுக்கும் சுற்று வட்டாரத் தமிழ்ப் பள்ளிகளின் யுபிஎஸ்ஆர் மாணவர்களுக்கும் டான்ஸ்ரீ நடராஜா இந்த நூலை எடுத்து வழங்கினார்.
யுபிஎஸ்ஆர் தேர்வுக்கான 5 மாதிரி கேள்வித் தாள்களையும் (தாள் 1 மற்றும் தாள் 2) அதற்கான விடைகளையும், மாதிரிக் கட்டுரைகளையும் கொண்ட இப்பயிற்சி நூலை தமிழ் மொழி கற்பிப்பதில் அனுபவம் வாய்ந்த சா.விக்னேஸ்வரி உருவாக்கியுள்ளார். சிலாங்கூர் மாநிலத்திலுள்ள அனைத்துத் தமிழ்ப் பள்ளிகளுக்கும் ஸ்ரீ மகாமாரியம்மன் கோயில் தேவஸ்தானத்தின் ஆதரவில் நேரடியாக அனுப்பும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இந்த நிகழ்ச்சியில் மாரியம்மன் கோயில் தேவஸ்தானத்தின் செயலாளர் சேதுபதி மற்றும் கல்விப் பகுதித் தலைவர் டத்தோ ஏ.டி.குமாரராஜா ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
தலைமையுரையாற்றிய தேவஸ்தானத் தலைவர் டான்ஸ்ரீ நடராஜா, பத்துமலை ஆலயம் தனது சொந்த நிலத்தில் பத்துமலைத் தமிழ்ப் பள்ளியை நிறுவியது முதற்கொண்டு, தொடர்ந்து பல வழிகளிலும், கல்விக்கு, குறிப்பாக தமிழ்ப் பள்ளிகளின் வளர்ச்சிக்கும், தமிழ் மொழிக்கும் பல வகைகளிலும் தேவஸ்தானம் ஆதரவு வழங்கி வந்துள்ளது. என்று பெருமையுடன் தெரிவித்தார்.
அந்த வகையில் இந்த ஆண்டு யுபிஎஸ்ஆர் தமிழ்ப் பள்ளி மாணவர்கள் தமிழ் மொழிப் பாடத்தில் சிறப்பான தேர்ச்சியடைய வேண்டும் என்ற நோக்கில் இந்த தேர்வு வழிகாட்டி பயிற்சி நூலை சிலாங்கூர் மாநிலத்திலுள்ள அனைத்து யுபிஎஸ்ஆர் தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கும் இலவசமாக வழங்க முன்வந்துள்ளதாகவும் நடராஜா தனதுரையில் தெரிவித்தார்.
உமா பதிப்பகத்தின் நற்றமிழ் பேரகராதி நூலும் வழங்கப்பட்டது
இதே நிகழ்ச்சியில் உமா பதிப்பகம் வெளியிட்டிருக்கும் நற்றமிழ் பேரகராதி நூலும் தமிழ்ப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் தேவஸ்தானம் ஆதரவில் டான்ஸ்ரீ நடராஜா அவர்களால் இலவசமாக வழங்கப்பட்டது.
இன்றைய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பத்திரிக்கையாளர்களுக்கும் நற்றமிழ் பேரகராதி நூலை டான்ஸ்ரீ நடராஜா அன்பளிப்பாக வழங்கினார்.
பத்துமலை தமிழ்ப் பள்ளி மாணவர்களும், சுற்று வட்டார தமிழ்ப் பள்ளி மாணவர்களும், தமிழ்ப் பள்ளி ஆசிரியர்களும் இந்த நிகழ்ச்சியில் திரளாகக் கலந்து கொண்டனர்.