கோலாலம்பூர் – அண்மையில், ஜோகூர் பாருவில் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த சிங்கப்பூரர் ஒருவரை அங்குள்ள சுல்தானா அமினா மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஆனால் அவர் சிகிச்சைப் பலனின்றி மரணமடைந்தார். இந்நிலையில், சிங்கப்பூரைச் சேர்ந்த ‘தி இண்டீபெண்டண்ட்’ என்ற செய்தி இணையதளம், சுல்தானா அமினா மருத்துவமனையில், முன்பணம் செலுத்தினால் தான் சிகிச்சைத் தருவோம் என்று கூறியதாகவும், அதற்குத் தாமதமானதால் தான் சிங்கப்பூரர் டான் இறந்தார் என்றும் செய்தி வெளியிட்டிருந்தது.
ஆனால், டானை ஜோகூர் மருத்துவமனையில் சேர்த்த அவரது நண்பர், மலாய் மொழி தெரியாததால், ‘தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கலாம்’ என்று ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தற்போது அந்த இணையதளம், அச்செய்தியை நீக்கியிருப்பதோடு, தவறான செய்தி வெளியிட்டதற்காக மன்னிப்பும் கேட்டிருக்கிறது.
இச்சம்பவம் குறித்து கடந்த செப்டம்பர் 1-ம் தேதி, சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் நூர் ஹிசாம் அப்துல்லா வெளியிட்டிருந்த செய்தியில், கடந்த ஆகஸ்ட் 25-ம் நடந்த இச்சம்பவத்தின் போது, அவசர அழைப்பு விடுத்த 13 நிமிடங்களில் அவசர ஊர்தி சம்பவ இடத்தை அடைந்திருப்பதாக குறிப்பேட்டில் இருக்கின்றது என்று தெரிவித்திருந்தார்.
மேலும், சுல்தானா அமினாவின் அவசரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட சிங்கப்பூரர் டானுக்கு, உடனடியாக சிகிச்சைகள் வழங்கப்பட்டிருக்கின்றன என்றும், எக்ஸ்ரே, சிடி ஸ்கேன் உள்ளிட்டவைகள் எந்த ஒரு முன்பணமும் வாங்காமால் செய்யப்பட்டிருக்கின்றன என்பதையும் நூர் ஹிசாம் உறுதிப்படுத்தினார்.
மூளையில் காயமடைந்த டானுக்கு மேல் சிகிச்சைகள் வழங்கப்பட வேண்டும் என்று அவரது குடும்பத்தாரிடம், அதன் பின்னரே 2,575 ரிங்கிட் கட்டும் படி மருத்துவமனை நிர்வாகம் கேட்டிருக்கிறது என்றும், ஆனால் டானின் குடும்பத்தார் தங்களின் சொந்த விருப்பத்தின் பேரில் சுல்தானா அமினா மருத்துவமனையில் இருந்து சிங்கப்பூர் மருத்துவமனைக்கு அறுவைச் சிகிச்சைக்காக மாற்றினர் என்றும் நூர் ஹிசாம் தெரிவித்திருக்கிறார்.
எனினும், சிங்கப்பூர் மருத்துவமனையில் டான் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.