சியோல் – கடந்த 67 ஆண்டுகளாக அமெரிக்கா – தென்கொரியா இடையில் நட்புறவு இருந்து வருகின்றது. அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் இராணுவ வீரர்கள் இணைந்து கொரிய தீபகற்பங்களில் மட்டுமல்ல ஆப்கானிஸ்தான், ஈராக்கில் கூடப் பணியாற்றியிருக்கின்றனர்.
அமெரிக்காவின் பாதுகாப்பான குடையின் கீழ் இருந்து வந்த தென்கொரியா பொருளாதார ரீதியிலும் உயர்வை அடைந்தது.
இந்நிலையில், அமெரிக்கா – தென்கொரியா இடையிலான நட்புறவு வடகொரியாவினால் விரிசல் அடையத் தொடங்கியிருக்கிறது.
கடந்த சில நாட்களாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தென்கொரியாவுக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்களை வைத்து வருவது, இனி இந்த நட்புறவைத் தொடர முடியுமா? என்று தென்கொரியாவுக்கு சந்தேகமே ஏற்பட்டிருக்கிறது.
கடந்த மே மாதம் புதிதாகப் பதவியேற்ற தென்கொரிய அதிபர் மூன் ஜா இன், வடகொரியாவுடன் பேசி அணு ஆயுதச் சோதனைகளை நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதியளித்தார்.
ஆனால், கடந்த ஞாயிற்றுக்கிழமை வடகொரியா 6-வது முறையாக அணு ஆயுதச் சோதனையை நடத்தியது.
இது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை கடும் ஆத்திரத்திற்குள்ளாக்கியது.
தென்கொரிய அதிபர் மூன், வடகொரியாவுடன் தீவிரமாகப் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என டிரம்ப் குற்றம் சாட்டி வருகின்றார்.
தென்கொரியாவுடனான வர்த்தக ஒப்பந்தங்களை இரத்து செய்யப் போவதாகவும் டிரம்ப் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.