கோத்தா கினபாலு – முன்னாள் அம்னோ உதவித் தலைவரும், சபா வாரிசான் கட்சியின் தலைவருமான ஷாபி அப்டாலின் சகோதரர் ஹாமிட் அப்டாலை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்தது.
நேற்று காலை 10.00 மணியளவில் இங்குள்ள ஊழல் தடுப்பு ஆணையத் தலைமையகத்தில் வாக்குமூலம் வழங்குவதற்காக வருகை தந்த ஹாமிட் அப்டால் சுமார் 10 மணி நேர விசாரணைக்குப் பின்னர், தடுத்து வைக்கப்பட்டார்.
நேற்று பிற்பகலில் அவரது இல்லமும் சுமார் 3 மணி நேரத்திற்கு சோதனையிடப்பட்டது. பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிகிறது.
இன்று புதன்கிழமை ஹாமிட் அப்டால் நீதிமன்றம் கொண்டுவரப்பட்டு, அவரது தடுப்புக் காவல் நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2009 முதல் 2015 வரை கிராமப்புற மேம்பாடுகள் என சபா மாநிலத்தில் சுமார் 60 நிறுவனங்களுக்கு 350 திட்டங்கள் வழங்கப்பட்டதில் ஊழல் நடந்திருக்கிறது என எழுந்த புகார்களின் அடிப்படையில் இந்த ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்தத் திட்டங்களின் மதிப்பு 7.5 பில்லியன் ரிங்கிட்டாக இருக்கும் என மதிப்பிடப்படுகிறது.
இதுவரையில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் சுமார் 170 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான வங்கிக் கணக்குகள் ஊழல் தடுப்பு ஆணையத்தால் முடக்கப்பட்டிருக்கின்றன.
மேம்பாட்டுத் திட்டங்களை முழுமையாக முடிப்பதற்கு முன்னரே அதற்கான குத்தகைப் பணம் செலுத்தப்பட்டது தொடர்பில் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.