ஷா ஆலாம் – ஜோகூர் சுல்தானின் அதிரடி அறிவிப்புகள், நடவடிக்கைகளைத் தொடர்ந்து, சிலாங்கூர் சுல்தான் ஷரபுடின் இட்ரிஸ் ஷா சிலாங்கூர் மாநிலத்தில் இஸ்லாம் தொடர்பான சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டிருக்கின்றார்.
சர்ச்சைக்குரிய ஜமிஹான் மாட் ஜின்-னுக்கு வழங்கப்பட்டிருந்த அதிகாரபூர்வ இஸ்லாமிய மதபோதகருக்கான அந்தஸ்தை மீட்டுக் கொள்ளுமாறு சிலாங்கூர் இஸ்லாமிய மன்றத்திற்கு உத்தரவிட்டிருக்கிறார். ஒரு மாநிலத்தின் இஸ்லாமிய விவகாரங்களை அம்மாநிலத்திற்கான இஸ்லாமிய மன்றம் கையாளும் என்பதும், இஸ்லாமிய விவகாரங்கள் என்று வரும்போது அதற்கான அதிகாரபூர்வ முடிவுகளை எடுக்கும் அதிகாரம் சுல்தான்களைச் சார்ந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும், புனித குரான் ஓதப்படும் தருணங்கள், தொழுகைக்கான அழைப்புகள் ஆகிய சமயங்கள் தவிர்த்து, மற்ற நேரங்களில் இஸ்லாமிய மதம் தொடர்பான உரைகள் சிலாங்கூர் மாநிலத்திலுள்ள பள்ளிவாசல்களிலும், மசூதிகளிலும் ஒலிபரப்பப்படும்போது, ஒலிபெருக்கிகளின் சத்தம் குறைக்கப்பட வேண்டும் எனவும் சிலாங்கூர் சுல்தான் உத்தரவிட்டிருக்கிறார்.
அவ்வாறு பள்ளிவாசல்களிலும், மசூதிகளிலும் மேற்கொள்ளப்படும் மத உரைகள் பதிவுகள் செய்யப்பட்டு, அதன் உள்ளடக்கங்கள் கண்காணிக்கப்பட வேண்டும் என்றும் சிலாங்கூர் சுல்தான் கட்டளையிட்டிருக்கிறார்.
இதன் மூலம், இஸ்லாத்தின் தோற்றமும் கௌரவமும் நிலைநிறுத்தப்பட வேண்டும் என்பதோடு சமூக நல்லிணக்கத்துக்காகவும் இவ்வாறு செய்யப்படுவதாக சிலாங்கூர் சுல்தான் மேலும் கூறியிருக்கிறார்.