மார்ச் 25 – நாளையோ அல்லது மார்ச் 27ஆம் தேதியோ தேசிய முன்னணி அரசாங்கத்தின் தலைமைத்துவம் நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக அறிவிப்பு எதனையும் செய்யாவிட்டால், மார்ச் 27ஆம் தேதி நெகிரி செம்பிலான மாநில சட்டமன்றம் இயல்பாகவே கலையும் முதல் மாநில சட்டமன்றமாகத் திகழும்.
மார்ச் 8ஆம் தேதியோடு பொதுத் தேர்தல் நடந்து 5 ஆண்டுகள் முடிந்தாலும், சட்டவிதிகளின்படி நெகிரி மாநில சட்டமன்றத்தின் 5 ஆண்டுகால தவணை மார்ச் 27ஆம் தேதிதான் முடிவடைகின்றது.
எனவே, மார்ச் 27ஆம் தேதிக்குள் தேசிய முன்னணி ஆட்சி செய்யும் மாநில சட்டமன்றங்கள் கலைக்கப்படாவிட்டால் முதன் முதலாக இயல்பாக கலையும் சரித்திரப் பிரசித்தி பெற்ற மாநிலமாக நெகிரி மாநிலம் விளங்கும்.
ஆனால் அதன்பிறகு தற்போதைய மாநில அரசாங்கம் பராமரிப்பு அரசாங்கமாக தொடர்ந்து செயல்படும். இருந்தாலும், முக்கிய முடிவுகளை எடுக்கும் அதிகாரம் அதற்கு இருக்காது.
புதிதாக முளைக்கும் சட்ட சிக்கல்கள்
இதற்கிடையில் மலேசியாவில் இதுபோன்ற அரசியல் நிகழ்வுகள் நடந்ததில்லை என்பதனால், புதிதாக சட்டசிக்கல்கள் ஏற்படும் சாத்தியங்கள் இருக்கின்றன.
காரணம், நடப்பு நெகிரி மந்திரிபுசார் முகமட் ஹாசான் (படம்) நெகிரி சட்டமன்றம் இயல்பாகவே மார்ச் 27ஆம் தேதி கலைந்து விடும் என்றும், அதன் பிறகு தனது அரசாங்கம் பராமரிப்பு அரசாங்கமாக தொடர்ந்து செயல்படும் என்று ஸ்டார் பத்திரிக்கையிடம் ஒரு பேட்டியில் கூறியிருக்கின்றார்.
ஆனால் மலேசியாகினி இணையத் தளத்திடம் இது குறித்து பேசிய தேர்தல் ஆணையத்தின் தலைவர் அப்துல் அசிஸ் முகமட் யூசோப் மார்ச் 27ஆம் தேதி சட்டமன்றத்தின் தவணைக் காலம் முடிந்துவிட்டதாக நெகிரி சட்டமன்றத்தின் அவைத் தலைவர் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் மூலம் தெரிவிக்க வேண்டும் எனவும் அதன்பிறகு 60 நாட்களுக்குள் தேர்தல் ஆணையம் அந்த மாநிலத்தில் தேர்தலை நடத்தும் என்றும் கூறியிருக்கின்றார்.
இத்தகைய சட்ட சிக்கல்கள் காரணமாக, எதிர்வரும் புதன்கிழமை அமைச்சரவைக் கூட்டம் முடிந்தவுடன் நாடாளுமன்றத்தையும் தாங்கள் ஆட்சி செய்யும் மாநில சட்டமன்றங்களையும் தேசிய முன்னணி அரசாங்கம் கலைக்கக் கூடிய சாத்தியங்களும் உள்ளன.
36 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட நெகிரி சட்டமன்றத்தில் தற்போது தேசிய முன்னணி 21 இடங்களையும், ஜசெக 10 இடங்களையும் பிகேஆர் 4 இடங்களையும் பாஸ் ஓர் இடத்தையும் கொண்டிருக்கின்றன.
தேசிய முன்னணிக்கும் மக்கள் கூட்டணிக்கும் இடையில் 6 சட்டமன்றத் தொகுதிகள் வித்தியாசமே இருப்பதால் எதிர்வரும் பொதுத் தேர்தலில் நெகிரி மாநிலத்திலும் இந்த இரண்டு அரசியல் கூட்டணிகளுக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.