கோலாலம்பூர் – ஏர் ஆசியா நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி டான்ஸ்ரீ டோனி பெர்னாண்டஸ் நேற்று ஞாயிற்றுக்கிழமை தனது ‘Flying high: My Story from Air Asia to QPR’ என்ற நினைவுத் தொகுப்பு நூலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.
தலைநகரில் உள்ள பிரபல நட்சத்திர உணவகத்தில் நடைபெற்ற இந்த நூல் வெளியீட்டு விழாவில், ஏர் ஆசியாவின் இணை நிறுவனரும், ஏர் ஆசியா மலேசியா நிர்வாகத் தலைவருமான டத்தோ கமாருடின் மெரானுன் மற்றும் ஏர் ஆசியாவைச் சேர்ந்த உயர் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
தான் இசையமைப்பாளராக இருந்து ஏர் ஆசியா நிறுவனராக உயர்ந்தது வரை தனது நினைவுகளில் இருக்கும் பல தகவல்கள் இந்தப் புத்தகத்தில் இருப்பதாக நூல் வெளியீட்டு விழாவில் டோனி குறிப்பிட்டார்.
“டத்தோ கமாருடினுடன் இணைந்து நான் ஏர் ஆசியாவைத் தொடங்கிய போது, எல்லோரும் எங்களைப் பைத்தியம் என்று நினைத்தார்கள்”
“விமான நிறுவனத்தால் எங்களுக்கு எந்த ஒரு வர்த்தகமும் ஆகாது என்றார்கள். இது சரியாக வராது என்றார்கள். நாங்கள் அவர்கள் கூறியதைக் கேட்டிருந்தால், தொடங்குவதற்கு முன்பே அதைக் கைவிட்டிருந்தால், இன்று இந்தப் புத்தகம் இருந்திருக்காது” என்று டோனி கூறினார்.
“இடை விடா முயற்சியோடு எதையும் செய்தால் கனவு ஒருநாள் நிச்சயம் நினைவாகும் என்பதற்கு இந்தப் புத்தகமே ஆதாரம்” என்றும் டோனி தெரிவித்தார்.
மேலும், இந்த நூலில், தனது அன்னைக்கு இருந்த ‘பைபோலார் டிஸ் ஆர்டர்’ என்ற மன பாதிப்புப் பற்றியும் வெளிப்படையாகக் கூறியிருப்பதாகவும் டோனி தெரிவித்தார்.
86.95 ரிங்கிட் மதிப்புடைய இந்த நூல், அனைத்து புத்தகக் கடைகளிலும் கிடைக்கும் என்பதோடு, ‘bigdutyfree.com’ என்ற இணையதளம் வாயிலாகவும் சலுகைகளோடு முன்பதிவு செய்யலாம்.