கொழும்பு – மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், அதிகாரப்பூர்வப் பயணமாக இலங்கை சென்றிருக்கிறார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது அரசாங்கக் குழுவினர் மற்றும் அமைச்சர்களுடன் இலங்கை சென்ற நஜிப்புக்கு அங்கு இராணுவ மரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனிடையே, இன்று செவ்வாய்க்கிழமை, இலங்கை வடக்கு மாகாண சபையின் முதல்வர் நீதியரசர் கனகசபாபதி விஸ்வலிங்கம் விக்னேஸ்வரன் (சி.வி.விக்னேஸ்வரன்), நஜிப் துன் ரசாக்கைச் சந்தித்து மரியாதை நிமித்தமாக அழைப்பு விடுத்தார்.
இச்சந்திப்பின் போது நஜிப்புடன், இந்தியா மற்றும் தெற்காசிய நாடுகளுக்கான மலேசியாவின் கட்டமைப்பு சிறப்புத் தூதர் டத்தோஸ்ரீ உத்தாமா சாமிவேலு, மலேசிய சுகாதார அமைச்சரும், மஇகா தேசியத் தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் உள்ளிட்ட தலைவர்கள் உடனிருந்தனர்.
இதனிடையே, இச்சந்திப்பு குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் தகவல் தெரிவித்திருக்கும் நஜிப், சி.வி.விக்னேஸ்வரனுடனான சந்திப்பு இனிமையானதாக இருந்ததாகவும், வடக்கு மாகாணப் பகுதியில் உள்ள தமிழர்களின் மேம்பாட்டிற்கும், வளர்ச்சிக்கும் உதவி செய்ய தாங்கள் ஒப்புக் கொண்டதாகவும் நஜிப் தெரிவித்திருக்கிறார்.
படங்கள்: நன்றி பிரதமர் அலுவலக டுவிட்டர் பக்கம்