
கோலாலம்பூர் – மலேசியாவுக்கு இலக்கிய வருகை மேற்கொண்டிருக்கும் திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் கலைமாமணி முத்துலிங்கம், கோலாலம்பூரிலும், சிரம்பானிலும் நடைபெறும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு இலக்கிய உரையாற்றுகிறார்.
“கவிஞர் கலைமாமணி முத்துலிங்கம் அவர்களுடன் ஒரு மாலைப் பொழுது” என்ற தலைப்பில் இந்த நிகழ்ச்சிகள் நடைபெறவிருக்கின்றன.
சிரம்பானில் முதல் நிகழ்ச்சி
இன்று ஞாயிற்றுக்கிழமை (31 டிசம்பர் 2017) காலை 11.00 மணியளவில் கவிஞர் முத்துலிங்கத்தின் முதல் நிகழ்ச்சி சிரம்பான், விஸ்மா மஇகா கட்டிட மண்டபத்தில் நடைபெறுகிறது.
அதைத் தொடர்ந்து நாளை திங்கட்கிழமை ஜனவரி முதல் நாளில் கவிஞர் முத்துலிங்கத்தின் இரண்டாவது நிகழ்ச்சி டான்ஸ்ரீ கே.ஆர்.சோமா அரங்கில் மாலை 4.30 மணியளவில் நடைபெறுகிறது.
இலவசமாக நடைபெறும் இந்த இலக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு இலக்கிய இன்பம் பருக, தமிழ் ஆர்வலர்கள் அழைக்கப்படுகிறார்கள்.
இந்த நிகழ்ச்சிகளில் கவிஞர் முத்துலிங்கம் அவரது பாடல்கள் பிறந்த கதை, எம்.ஜிஆருடனான திரைப்பட, அரசியல் அநுபவங்கள், பாடல்கள் எழுதிய சூழல்கள் ஆகியவற்றை சுவைப்பட வழங்கவிருக்கிறார்.
இந்த நிகழ்ச்சிகள் குறித்த மேல்விவரங்களுக்கு தொடர்பு கொள்ள:
கரு பன்னீர்செல்வம்
செல்பேசி: 012 305 6799
செயலாளர், ஏற்பாட்டுக்குழு
கவிஞர் முத்துலிங்கத்தின் இலக்கிய வாழ்வு
தனது கவிதா இரசிகர்களைச் சந்திக்கவும், இலக்கிய உரைகள் வழங்கவும், மலேசியாவுக்குத் தற்போது வருகை தந்திருக்கும் திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் முத்துலிங்கம் மிக நீண்டகால இலக்கியப் பயணத்தைக் கொண்டவர்.
கவிஞர் முத்துலிங்கம் அவர்கள் பிரபலமான திரைப்பட பாடலாசிரியர், வசனகர்த்தா, ஊடகத் துறையாளர், இலக்கிய உரையாளர் என்பது போன்ற பன்முகத்திறனை கொண்ட முன்னாள் தமிழ்நாட்டு அரசவைக்கவிஞர் ஆவார்.
இவருக்கு தமிழ் நாட்டு அரசு 1979-இல் சிறந்த பாடலாசிரியர் விருதும், 1981ல் கலை மாமணி விருதும், 1991ல் ‘கலைத்துறை வித்தகர்’ விருதினையும் வழங்கி உள்ளது. அவரது சீரியத் தமிழ் இலக்கியப்பணிகளுக்காக ‘ பாவேந்தர் பாரதிதாசன் ‘ விருதும், தென்னிந்திய திரைச்சங்கம் ‘ கலைச்செல்வம்’ என்ற விருதுகளும் வழங்கப்பட்டிருக்கிறது.
கவிஞர் முத்துலிங்கத்தின் இலக்கியப்பரவேசம்
20.3.1942ம் ஆண்டு, தமிழ்நாடு சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கடம்பங்குடி கிராமத்தில் சுப்பையா சேர்வை –குஞ்சரம்மாள் தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தவர் முத்துலிங்கம்.
தனது தாயார் தனது தம்பிக்காக பாடிய தாலாட்டுப் பாடல்களைக் கேட்டு, கேட்டு அந்த நாட்டுப்புறப்பாடல்கள் ஏற்படுத்திய தாக்கத்தினால் கவிதையின் மேல் மோகம் கொண்டு, அவற்றைக் கற்க ஆரம்பித்தார். தனது 16-வது வயதில் கம்பராமாயணத்தின் அழகியலை கவிதையாக தொகுத்தார்.
தமிழ் இலக்கணங்களையும், மரபுகளையும், யாப்பிலக்கணத்தையும் கற்று தனது இலக்கிய அறிவினை வளர்த்துக்கொண்டார். மரபுக்கவிதைகள், புதுக்கவிதைகள் எழுதி பத்திரிக்கைகளுக்கு அனுப்பினார்.
1966-இல் கலைஞர் கருணாநிதி தோற்றுவித்த ‘முரசொலி’ இதழில் துணை ஆசிரியராக சேர்ந்தார். 1972ல் ‘அலையோசை’ பத்திரிக்கையில் 1975 வரை ஆசிரியராகப் பணியாற்றினார்.
1984-இல் தமிழ்நாட்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்வு பெற்றார். 1987-இல் தமிழ்நாட்டு அரசவைக் கவிஞராக தேர்வு செய்யப்பட்டார்.
இவர் எழுதிய முதற்கவிதை 1958-இல் கவிஞர் சுரதா அவர்களின் ‘ இலக்கியம்’ பத்திரிக்கையில் வெளி வந்தது. தனது இலக்கிய ஆற்றலை மேம்படுத்தும் நோக்கில் வித்வான் பாடத்திட்டத்தில் இணைந்து படித்து பட்டம் பெற்றார்.
தனது விவசாயக் குடும்பத்தை நினைவுக் கூரும் வகையில், ஆடு , மாடு மேய்த்ததையும், உழவு வாழ்க்கை, ஏர் உழுவதையும் தொகுத்து, 1961-இல், பாரதிதாசன் அவர்களின் வாழ்த்துரையோடு வெண்ணிலா என்ற கவிதைத் தொகுப்பினை வெளியிட்டார்.
இதுவரையில் 10 நூல்களை வெளியிட்டுள்ளார். 2006-இல் இவர் வெளியிட்ட கட்டுரைத் தொகுப்பான ‘ காற்றில் விதைத்த கருத்து’ ஒரு இலட்சம் ரூபாய் பரிசினை பெற்றது. கவிதைத் தொகுப்பான ‘முத்துலிங்கம் கவிதைகள்’ இலக்கியப்பரிசினை வென்றுள்ளது.
இலக்கியத்துறையில் இருந்து இவர் பெற்ற அனுபவங்கள் 1973-இல் சினிமாத் துறையினுள் காலடி எடுத்து வைக்க அடித்தளம் அமைத்தது.
இவர் சினிமாவுக்கு எழுதிய முதற்பாடல், ‘பொண்ணுக்கு தங்க மனசு’ திரையில் ‘தஞ்சாவூரு சீமையிலே தாவி வந்தேன் பொன்னியம்மா’ என்ற பாடலாகும்.
திரையுலக முன்னணி நடிகர்களான எம்ஜிஆர், சிவாஜி கணேசன், கமலஹாசன், விஜயகாந்த், பாக்யராஜ், சத்யராஜ், மோகன் போன்ற ஏராளமான நடிகர்களுக்கும் பாடல்கள் எழுதி இருக்கிறார்.
இதுவரையில் 1450 பாடல்களை தமிழ் திரைப்படங்களுக்கு எழுதி இருக்கிறார் கவிஞர் முத்துலிங்கம்.