Home நாடு மேற்கு மலேசியாவில் பக்காத்தான் தொகுதி பங்கீடு: பெர்சாத்து 52; பிகேஆர் 51; அமானா 27; ஜசெக...

மேற்கு மலேசியாவில் பக்காத்தான் தொகுதி பங்கீடு: பெர்சாத்து 52; பிகேஆர் 51; அமானா 27; ஜசெக 35

746
0
SHARE
Ad

pakatan harapan-logoகோலாலம்பூர் – ஞாயிற்றுக்கிழமையன்று (7 ஜனவரி 2018) பக்காத்தான் ஹரப்பான் தனது கூட்டணிக் கட்சிகளின் மாநாட்டை நடத்தி பிரதமர் மற்றும் துணைப் பிரதமர் வேட்பாளர்களை அறிவித்ததைத் தொடர்ந்து பக்காத்தான் கட்சிகள் மேற்கு மலேசியாவில் உள்ள நாடாளுமன்றத் தொகுதிகளில் தொகுதி உடன்பாடு கண்டுள்ளன என நேற்றிரவு வெளியிடப்பட்ட அதிகாரத்துவமற்ற ஓர் அறிக்கை தெரிவிக்கிறது.

அதன்படி மகாதீர் – மொகிதின் தலைமையிலான பிரிபூமி பெர்சாத்து கட்சி 52 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

பெர்சாத்து கட்சியின் குறிப்பிடத்தக்க தொகுதிகள்

pribumi bersatu-ppbm-logஇந்தக் கட்சி போட்டியிடும் தொகுதிகளில் லங்காவி, குபாங் பாசு ஆகியவை குறிப்பிடத்தக்கவையாகும். குபாங் பாசு மகாதீர் அம்னோ சார்பாகப் போட்டியிட்டு பல தவணைகள் வென்ற தொகுதியாகும். லங்காவி எதிர்வரும் 14-வது பொதுத் தேர்தலில் மகாதீர் களம் காணுவார் என எதிர்பார்க்கப்படும் தொகுதியாகும்.

#TamilSchoolmychoice

எனவே, அவரை எதிர்த்து பிரிபூமி பெர்சாத்து கட்சி இங்கு போட்டியிடுவது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.

பிரதமர் நஜிப்பின் பெக்கான் (பகாங்) தொகுதியும்  பெர்சாத்து கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதனால் பிரதமருக்கு எதிராக பெர்சாத்து கட்சி யாரை நிறுத்தப் போகிறது என்ற ஆர்வமும் இயல்பாகவே எழுந்திருக்கிறது.

ஜோகூர் மாநிலத்தில் உள்ள பாகோ தொகுதியும் பெர்சாத்து கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தொகுதி கடந்த பொதுத் தேர்தலில் தற்போது பெர்சாத்து கட்சியின் தலைவராக இருக்கும் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் போட்டியிட்டு வென்ற தொகுதியாகும். எனவே இங்கு மீண்டும் அவரே போட்டியிடக்கூடும்.

புத்ரா ஜெயா தொகுதியும் பெர்சாத்து கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தொகுதியிலும் மகாதீர் போட்டியிடக் கூடும் என்ற ஆரூடங்களை ஊடகங்கள் தொடர்ந்து எழுதி வருகின்றன.

பிகேஆர் கட்சிக்கு 51 தொகுதிகள்

PKR-Logo-Sliderஇந்தத் தொகுதிப் பங்கீட்டில் முக்கியமாகப் பார்க்கப்படும் இன்னொரு அம்சம் பிகேஆர் கட்சி, மகாதீருக்கும் அவரது பெர்சாத்து கட்சிக்கும் முன்னுரிமை தந்து அவர்கள் போட்டியிட 52 தொகுதிகளைத் தந்துவிட்டு தங்களுக்கு 51 தொகுதிகளை மட்டும் வைத்துக் கொண்டதாகும்.

எனினும், பெர்சாத்து கட்சி சபா, சரவாக் மாநிலங்களில் கவனம் செலுத்தாது என்றும் அங்கே பிகேஆர் கட்சியே போட்டியிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சபா மாநிலத்திலோ அம்னோவின் முன்னாள் உதவித் தலைவர் ஷாபி அப்டாலின் சபா வாரிசான் கட்சி முன்னின்று தலைமையேற்று போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிகேஆர் கட்சி மேற்கு மலேசியாவில் ஏற்கனவே வெற்றி பெற்றுள்ள பெரும்பாலான தொகுதிகளைக் கொண்டிருக்கிறது.

ஜசெகவுக்கு 35 தொகுதிகள்

DAP-LOGO-SLIDERஜசெக தனது வழக்கமான பாரம்பரியத் தொகுதிகளில் போட்டியிடுகிறது. 14-வது பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சிக் கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு பல தொகுதிகளை விட்டுக் கொடுத்து விட்டு 35 தொகுதிகளில் மட்டுமே ஜசெக களம் இறங்குகிறது.

வழக்கமாக மேற்கு மலேசியாவில் குறைந்தது 50 தொகுதிகளில் ஜசெக தனித்துப் போட்டியிடும். ஆனால் இந்த முறை வெற்றி வாய்ப்புள்ள 35 தொகுதிகளை மட்டுமே அக்கட்சி குறி வைத்துள்ளது.

அமானா கட்சிக்கு 27 தொகுதிகள்

பாஸ் கட்சியிலிருந்து பிரிந்து தோற்றம் கண்ட பார்ட்டி அமானா நெகாரா கட்சி பக்காத்தான் கூட்டணியின் கீழ் 27 தொகுதிகளில் போட்டியிடுகின்றது.

முன்பு பாஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்த பல தொகுதிகளில் தற்போது அமானா போட்டியிடுகிறது.

Parti Amanah Negara - logoகுறிப்பாக ஷா ஆலாம் தொகுதியில் மீண்டும் அமானா கட்சியே போட்டியிடுகிறது. இதன் மூலம் சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் அஸ்மின் அலி ஷா ஆலாம் தொகுதியில் போட்டியிடுவார் என்ற ஆரூடங்கள் பொய்யாக்கப்பட்டுள்ளன.

அவர் மீண்டும் கோம்பாக் தொகுதியில் போட்டியிட, நடப்பு ஷா ஆலாம் நாடாளுமன்ற உறுப்பினர் காலிட் சாமாட் ஷா ஆலாம் தொகுதியில் மீண்டும் போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பக்காத்தான் தொகுதி உடன்பாட்டில் அமானா கட்சி மிகுந்த விட்டுக் கொடுக்கும் தன்மையுடன் செயல்பட்டது என மகாதீரே பக்காத்தான் கூட்டணிக் கட்சி மாநாட்டில் அறிவித்துப் பாராட்டினார் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

வியூகம் என்ன?

தொகுதிப் பங்கீட்டை மேலோட்டமாகப் பார்க்கும்போது மலாய்க்காரர்கள் பெரும்பான்மையாக இருக்கும் தொகுதிகளில் பெர்சாத்து கட்சியும், பல இன வாக்காளர்களைக் கொண்ட தொகுதிகளில் பிகேஆர் கட்சியும் போட்டியிடுகின்றன.

பாஸ் கட்சியின் தொகுதிகளில் அமானா களமிறங்குகிறது.

சீன வாக்காளர்களை அதிகம் கொண்ட தொகுதிகளில் வழக்கம் போல ஜசெக போட்டியில் இறங்குகிறது.

மாநில சட்டமன்றத் தொகுதிகளுக்கான தொகுதி ஒதுக்கீடுகள் இன்னும் முடிவாகவில்லை.

நாடாளுமன்றத் தொகுதி உடன்பாடு முடிவடைந்த நிலையில் இனி அடுத்த கட்டமாக தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் போட்டியிடக் கூடிய தகுந்த வேட்பாளர்களை அடையாளம் காணும் பணியில் பக்காத்தான் கட்சிகள் முனைப்புடன் செயல்படத் தொடங்கும்.

-இரா.முத்தரசன்