Home நாடு “தமிழ்ப் பள்ளிகள் மீதான கடமைகளைச் செய்து முடிப்பேன்- குற்றங் குறைகளுக்கு பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க...

“தமிழ்ப் பள்ளிகள் மீதான கடமைகளைச் செய்து முடிப்பேன்- குற்றங் குறைகளுக்கு பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க மாட்டேன்” – கமலநாதன் உரை

3424
0
SHARE
Ad
kamalanathan-tamil schools-boards-conference-03022018 (1)
தமிழ்ப் பள்ளிகளின் மேலாளர் வாரியங்களுக்கான 2-வது தேசிய நிலையிலான கருத்தரங்கத்தில் கமலநாதன் உரையாற்றுகிறார்…

தஞ்சோங் மாலிம் – இங்குள்ள சுல்தான் இட்ரிஸ் கல்வி பல்கலைக் கழகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை 2 பிப்ரவரி 2018 தொடங்கி, 4 பிப்ரவரி 2018 வரை 3 நாட்களுக்கு தமிழ்ப் பள்ளிகளின் மேலாளர் வாரியங்களுக்கான தேசிய நிலையிலான கருத்தரங்கம் நடைபெற்றது.

இந்த கருத்தரங்கை, சனிக்கிழமையன்று அதிகாரபூர்வமாகத் தொடக்கி வைத்து உரையாற்றினார், கல்வி துணையமைச்சர் டத்தோ ப.கமலநாதன். தமிழ்ப் பள்ளிகள் மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்தும், அவற்றுக்கானத் தனது பணிகள் குறித்தும், புள்ளி விவரங்களோடு தனது உரையைப் படைத்த அவர், தமது மனதில் பட்ட வெளிப்படையான கருத்துகளை உணர்ச்சிபூர்வமாக வெளியிட்டது, கலந்து கொண்ட பேராளர்களின் நெஞ்சைத் தொட்டது.

kamalanathan-tamil schools-boards-conference-03022018 (3)தனது மனதில் கொட்டிக் கிடந்த ஆதங்கங்களையும், தமிழ்ப் பள்ளிகளை மேம்படுத்தும் தனது முயற்சிகளையும், தனது பணியில் தான் எதிர்நோக்கும் சவால்களையும், அவற்றைக் களைய படிப்படியாகக் கண்டெடுக்கப்பட்டத் தீர்வுகளையும், தெளிவான விளக்கங்களோடும், வரைபடங்களோடும், கமலநாதன் வெளிப்படையாக முன் எடுத்து வைத்தார்.

#TamilSchoolmychoice

“நான் 2013 முதல் 2015 வரை கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சில் துணையமைச்சராகவும், 2015 முதல் கல்வி அமைச்சில் துணையமைச்சராகவும் பணியாற்றி வருகிறேன். என்னிடம் இந்தப் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டபோது, பிரதமர் நஜிப் துன் ரசாக்கும், மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்பிரமணியமும், தமிழ்ப் பள்ளிகளின் முன்னேற்றத்திற்குத் தடையாக இருக்கும் முட்டுக்கட்டைகளைச் சுட்டிக் காட்டி, ஓராண்டுக்குள் அவற்றை அகற்றுவதோடு புதிய திட்டங்களையும் நிறைவேற்றித் தர வேண்டிய கடமையையும் என்னிடம் ஒப்படைத்தனர்.

kamalanathan-tamil schools-boards-conference-03022018 (5)அப்போது முதல் அவர்கள் வகுத்த இலக்குகளை அடைவதற்குக் கடுமையாக உழைப்பதிலும், கொடுக்கப்பட்டக் காலகட்டதிற்குள், அந்த கடமைகளை சிறப்பாக நிறைவேற்றித்தரவேண்டும் என்பதிலும்தான் எனது அனைத்துச் செயல்பாடுகளும் அமைந்தது” என கமலநாதன் தெரிவித்தார்.

குறைகூறல்களுக்கு பதிலளித்து நேரத்தை வீணாக்க விரும்பவில்லை

“இதற்கிடையில் எனது பணிகள் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகள், தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகின்றன. தகுந்த சான்றுகளோடு கேட்கப்படும் கேள்விகளுக்கு ஆதாரங்களோடு பதில் அளிக்கத் தேவையான ஆவணங்கள் என்னிடம் உண்டு. ஆனால் ஆதாரமற்றக் குறை கூறல்களுக்கெல்லாம் எல்லாம் எனக்கு பதிலளிக்க நேரம் இல்லை. பதிலை எதிர்ப்பார்த்துக் கேள்விக் கேட்பது வேறு, குறைகூறவேண்டும் என்பதற்காக மட்டுமே கேள்வி கேட்பது என்பது வேறு. இந்த வேறுபாடு எனக்கு நன்றாகவே தெரியும். எனது நேரம் எவ்வளவு முக்கியம் என்பதும் எனக்குத் தெரியும். கொடுக்கப்பட்டக் கடமையை, கொடுக்கப்பட்ட காலகட்டத்திற்குள் நான் நிறைவேற்றவேண்டும். அதுவே எனது குறிக்கோள்.” என்று ஆணித்தரமாகக் கூறிய கமலநாதன்,

kamalanathan-tamil schools-boards-conference-03022018 (4)“நான் மனம் சஞ்சலப்பட்டுக் கொண்டும், கவலைப்பட்டுக் கொண்டும், ஆதாரமற்றக் குற்றச் சாட்டுகளுக்கெலாம் பதில் அளித்துக் கொண்டும் இருந்தால் தமிழ்ப் பள்ளிகள் மேம்பாட்டில் நாங்கள் கொண்டுள்ள இலக்குகளை என்னால் அடைய முடியாது. எனவேதான், எல்லா விவகாரங்களுக்கும் பதில் சொல்லி எனது நேரத்தையும், ஆற்றலையும் வீணாக்க நான் விரும்பவில்லை. நான் செய்து முடிக்க வேண்டிய கடமையிலேயே கண்ணுங் கருத்துமாக இருந்து வருகிறேன்” என்று வலியுறுத்தினார்.

கமலநாதன் இல்லையென்றாலும் செய்தவை நிலைத்திருக்கும்

kamalanathan-tamil schools-boards-conference-03022018 (2)“இந்த வேளையில் ஒன்றை உறுதிபட கூற விரும்புகிறேன். நான் வகுத்து வைத்திருக்கும் இலக்குகளை, திட்டங்களை இயன்றவரை செயல்படுத்தி முடிப்பேன். அதற்குப் பின்னர் கமலநாதன் இருப்பானோ இல்லையோ தெரியாது. ஆனால் நான் செய்து முடித்த செயல்திட்டங்கள், நிலைத்திருக்கும். நமது நாட்டில் தமிழ்ப் பள்ளிகளின் நிலைத்தன்மையை அவை உறுதி செய்யும். இனிவரும் காலத்தில் அதன் பலன்களை இந்திய சமுதாயம் அனுபவிக்கும். தமிழ் மொழியும், தமிழ்ப் பள்ளிகளும் தொடர்ந்து நமது நாட்டில் உயிர்ப்புடன் திகழும்” என உணர்ச்சிகரமாக முறையில் கூறினார் கமலநாதன்.

அலுவலகத்தில் தன்னைச் சந்திக்க முடிவதில்லையா?

kamalanathan-2nd tamil schools board-conf-03022018சில சமயங்களில் தன்னைச் சந்திக்க வருபவர்கள் அலுவலகத்தில் தன்னைச் சந்திக்க முடிவதில்லை எனக் குறைப்பட்டுக் கொள்கின்றனர் என்பதையும் சுட்டிக் காட்டிய கமலநாதன் “நான் அலுவலகத்தில் அமர்ந்து கொண்டு வருபவர்களைச் சந்தித்துக் கொண்டு அவர்களின் பிரச்சனைகளை மட்டும் கேட்டுக் கொண்டும் கவனித்துக் கொண்டும் இருந்தால், நாடு முழுவதும் பரந்திருக்கும் தமிழ்ப் பள்ளிகள் மீதான பிரச்சனைகளுக்கு என்னால் தீர்வு காண முடியாமல் போகும். பல பள்ளிகளுக்கு நான் நேரடியாக வருகை தந்து கள நிலவரங்களை அறிந்து கொண்டு முடிவெடுக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அதனால்தான் நான் அடிக்கடி வெளியூர்களுக்கு செல்ல வேண்டிய நிலைமையால் பலரை அலுவலகத்தில் சந்திக்க முடிவதில்லை. அதே சமயத்தில் முக்கியமான விவகாரமாக இருந்தால், அதற்காக நேரம் ஒதுக்கி யாரையும் சந்திக்காமல் இருந்ததும் இல்லை” என்றும் கமலநாதன் தனக்கிருக்கும் பணிச்சுமை குறித்து விளக்கினார்.

kamalanathan-2nd tamil schools board-conf-(2)-03022018தனது இத்தகைய அணுகுமுறைகளால், தனிப்பட்ட நபர்களுக்கு என்மீது குறைகள் இருக்கலாம் எனக் கூறிய கமலநாதன் “ஆனால் எனது திட்டமிட்ட, இலக்குகளோடு கூடிய அணுகுமுறைகளால் தமிழ்ப் பள்ளிகள் தழைத்திருக்கின்றன. அதனால்தான் 523 பள்ளிகளாக இருந்த எண்ணிக்கை இன்று 530 ஆக உயர்ந்திருக்கிறது. 2009 முதல் 2012 வரை 340 மில்லியன் ரிங்கிட்டாக இருந்த அரசாங்க நிதி ஒதுக்கீடு, 2013-2018 காலகட்டத்தில் கூடுதலான 607.54 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டு இதுவரையில் 947.54 மில்லியன் தமிழ்ப் பள்ளிகளின் மேம்பாடுகளுக்காக ஒதுக்கப்பட்டிருக்கின்றன. 21 பள்ளிகள் மாற்று நிலங்களுக்கு இடம் பெயர்ந்திருக்கின்றன. 18 புதிய இணைக் கட்டடங்கள் எழுந்திருக்கின்றன. 15 பள்ளிகளில் விளையாட்டுகளுக்காக வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. பாலர் பள்ளிகளுக்காக 10 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டு அதற்காக மேலும் 50 வகுப்பறைகள் அதற்குரிய வசதிகளோடு கட்டப்பட்டிருக்கின்றன” என்றும் இந்த புள்ளிவிவரங்களை ஆதாரங்களோடு, மேடைத் திரையில், கருத்தரங்கில் கலந்து கொண்டவர்களின் முன்னிலையில் கமலநாதன் படைத்தார்.

kamalanathan-tamil schools-boards-conference-03022018 (6)“எனது பணிகள் தொடர்ந்து கொண்டிருக்கும். எனக்கு இடப்பட்டிருக்கும் பணிகள், எனக்கு வகுக்கப்பட்டிருக்கும் இலக்குகள் ஆகியவற்றை எனது பதவிக் காலத்திற்குள் இயன்றவரை செய்துமுடிக்க – அதற்காக கடுமையாக உழைக்க நான் கடப்பாடு கொண்டுள்ளேன். அதுவரையில் என்மீது கூறப்படும் குற்றங்குறைகளை ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு, அதைப் பற்றிக் கவலைப்படாமல், எனது நோக்கங்களை நோக்கியே எனது பணிகளும், பயணமும் அமைந்திருக்கும்” என்றும் கமலநாதன் சூளுரைத்தார்.

-செல்லியல் தொகுப்பு