ஜோர்ஜ் டவுன் – தற்கொலை முயற்சியின் காரணமாக மரணமடைந்த பதின்ம வயது மாணவி எம்.வசந்தபிரியா குறித்த செய்திகளை வெளியிட்ட நியூ ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ், பெரித்தா ஹரியான் பத்திரிக்கைகள் அந்த செய்திகளை மீட்டுக் கொண்டு மன்னிப்பு தெரிவிக்க வேண்டும் என வசந்தபிரியாவின் குடும்பத்தினர் சட்ட நடவடிக்கை கோரும் கடிதத்தை அனுப்பியுள்ளனர்.
கடந்த பிப்ரவரி 11-ஆம் தேதி வெளியிட்ட செய்திகளில் அந்தப் பத்திரிக்கைகள் “சிசிடிவி எனப்படும் தானியங்கி படக் கருவிகளின் காணொளி பதிவுகளில் ஐபோனை வசந்தபிரியா எடுப்பது பதிவாகியுள்ளது” எனக் குறிப்பிடப்பட்டிருந்தன.
இதனைத் தொடர்ந்து நியூ ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் பத்திரிக்கை குழும ஆசிரியருக்கும், அந்த செய்தியை எழுதிய பினாங்கு பத்திரிக்கையாளர் ஷாம்சுல் முனிர் சபினி ஆகிய இருவருக்கும் தங்களின் வழக்கறிஞர் மூலம் வசந்தபிரியா குடும்பத்தினர் சட்ட நடவடிக்கைக்கான கடிதத்தை அனுப்பியுள்ளனர்.
அந்த இரண்டு பத்திரிக்கைகளிலும் அந்த செய்தி வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து வசந்தபிரியாவின் தந்தை முனியாண்டி பினாங்கு நிபோங் திபாலில் நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பில் இந்தத் தகவலை வெளியிட்டார். மரணமடைந்த தனது மகளின் மீது களங்கம் சுமத்த வேண்டும் என அனைத்துத் தரப்பினருக்கும் முனியாண்டி கோரிக்கையும் விடுத்தார்.
முனியாண்டியின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் அவரது வழக்கறிஞர் பரம்ஜிட் சிங்கும் கலந்து கொண்டார். “பினாங்கு காவல் துறைத் தலைவர் டத்தோஸ்ரீ ஏ.தெய்வீகன் பத்திரிக்கையாளர்களிடம் பேசும்போது சம்பந்தப்பட்ட காணொளி பதிவில் காணப்படும் நபரின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்திருக்கிறார். இந்நிலையில் சிசிடிவி காணொளியில் இருக்கும் நபர் வசந்தபிரியாதான் என இந்தப் பத்திரிக்கைகள் செய்திகள் வெளியிட்டிருப்பது குறித்து தனது கட்சிக்காரரான முனியாண்டி அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்துள்ளார். எனவே அந்தப் பத்திரிக்கைகள் உடனடியாகத் தங்களின் செய்திகளை மீட்டுக் கொண்டு, அத்தகைய செய்திகளை வெளியிட்டதற்காக மன்னிப்பு ஒன்றையும் வெளியிட வேண்டும்” என பரம்ஜிட் சிங் பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
பினாங்கிலுள்ள பள்ளி ஒன்றில், ஆசிரியரின் ஐபோனைத் திருடியதாகக் குற்றம்சாட்டப்பட்ட 14 வயது மாணவி வசந்தபிரியா, தனது வீட்டில் தூக்கு மாட்டிக் கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்தார்.
எனினும், பெற்றோரால் உடனடியாகக் காப்பாற்றப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், மூளை செயலிழந்த நிலையில் செபராங் ஜெயா மருத்துவமனையில் காலமானார்.