Home நாடு இஸ்ரேலுடன் மலேசியாவுக்கு தொடர்பா? – ஹராப்பான் எம்பி கேள்வி!

இஸ்ரேலுடன் மலேசியாவுக்கு தொடர்பா? – ஹராப்பான் எம்பி கேள்வி!

987
0
SHARE
Ad

Raja Kamarul Bahrin Shah Raja Ahmadகோலாலம்பூர் – இஸ்ரேலைச் சேர்ந்த உயர்மட்டத் தலைவர்கள் மலேசியாவுக்கு அண்மையில் வருகை தந்ததையடுத்து, இஸ்ரேல் விவகாரத்தில் மலேசியா தனது நிலைப்பாட்டைத் தளர்த்திவிட்டதா? என கோல திரங்கானு நாடாளுமன்ற உறுப்பினர் ராஜா கமாருல் பாஹ்ரின் ராஜா அகமட் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

மலேசிய அரசாங்கத்தின் முன்னறிவிப்பில்லாத இந்த நகர்வு, நாட்டில், பெரும்பான்மையான முஸ்லிம்களை சோகத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்திவிட்டதாகவும் ராஜா கமாருல் பாஹ்ரின் ஷா ராஜா அகமட் தெரிவித்திருக்கிறார்.

“பணத்திற்காகவும், வர்த்தகத்திற்காகவும், முஸ்லிம்களின் கௌரவத்தை இஸ்ரேலிடம் அடகு வைத்துவிட்டோமா?”

#TamilSchoolmychoice

“அண்மையில் துணைப் பிரதமர், உய்ஹூர் முஸ்லிம்கள் 12 பேரை அவர்களின் நாடான சீனாவிற்கு அனுப்பி வைத்து இரு நாடுகளுக்கு இடையில் நல்லிணக்கத்தை நிலைநிறுத்துவதாகத் தெரிவித்தார். அது தான் இந்த நாட்டில் முஸ்லிம்களின் கௌரவம் மற்றும் பெருமையாகிவிட்டதா?” என கமாருல் பாஹ்ரின் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

அண்மையில் கோலாலம்பூரில் நடைபெற்ற 9-வது உலக நகர்ப்புற மாநாட்டில் இஸ்ரேலைச் சேர்ந்த உயர்மட்டத் தலைவர்களுடன் பேராளர்களும் கலந்து கொண்டதாக வெளிவந்த செய்தியைச் சுட்டிக் காட்டி கமாருல் பாஹ்ரின் இக்கருத்தினைத் தெரிவித்திருக்கிறார்.

ஐக்கிய நாடுகளுக்கான முன்னாள் இஸ்ரேல் துணைத் தூதர் டேவிட் ரோயிட் தலைமையில் இம்மாநாட்டில் இஸ்ரேல் பேராளர்கள் கலந்து கொண்டதாகச் செய்திகள் கூறுகின்றன.

இதனிடையே, இஸ்ரேலுடன் தற்போது மலேசியாவிற்கு என்ன உறவு என்பதை மலேசிய அரசாங்கம் தெளிவாகக் கூற வேண்டும் என்றும் கமாருல் பாஹ்ரின் வலியுறுத்தியிருக்கிறார்.

“இஸ்ரேலுடன் நெருங்கிய உறவு வைத்திருப்பதாகக் கூறப்படும் சவுதி அரேபிய அரசாங்கத்தின் வழித்தடங்களை நஜிப் பின்பற்ற ஆவலாக இருக்கிறாரா? மலேசியா இஸ்ரேலுடன் உறவு வைத்திருக்கிறதா?” என்றும் கமாருல் பாஹ்ரின் கேள்வி எழுப்பியிருக்கிறார்.