கோலாலம்பூர் – மகாதீரின் வயது குறித்து நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு, திடீரென மகாதீர் வருகை புரிந்தவுடன், அவரைப் பார்த்து தான் பயந்துவிட்டதாக சிலர் கூறி வருவதை அரசியல் ஆய்வாளரான கமாருல் சமான் மறுத்திருக்கிறார்.
இது குறித்து கமாருல் தனது ஃபேஸ்புக்கில் வெளியிட்டிருக்கும் தகவலில், “கலந்தரையாடல் நிகழ்ச்சிக்கு திடீரென மகாதீர் வந்துவிட்டதால் நான் பயந்துவிட்டதாக, புகைப்படங்களுடன் நட்பு ஊடகங்களில் சிலர் கூறி வருகின்றனர்.அது உண்மையில்லை.
“என்னை விமர்சித்துப் பார் என்பது போல், நட்பு ஊடகங்களில் முகம் காட்டி, மகாதீர் தனது துணிச்சலை வெளிப்படுத்த முயற்சி செய்திருப்பது வேடிக்கையாக இருக்கிறது. காரணம், உண்மையில் அவர் துணிச்சலுடன் இருந்திருந்தால், சினார் ஹரியானின் அழைப்பை ஏற்று நிகழ்ச்சியில் நடுவர்களில் ஒருவராக வந்திருப்பார். இப்படி பாதியில் வந்திருக்கமாட்டார்.பார்வையாளர்களிடமிருந்து கேள்வி வரும் என்று நம்பினேன். அவ்வாறு வந்திருந்தால் மகாதீரின் முகத்திற்கு நேராக விமர்சித்திருப்பேன்” என்று கமாருல் தெரிவித்திருக்கிறார்.
நேற்று வியாழக்கிழமை இங்குள்ள காராங்கிராப் மலாய் ஊடக நிறுவன வளாகத்தில் ‘சினார் ஹாரியான்’ மலாய் நாளிதழ் “93 வயதில் மகாதீர் பிரதமராகத் தகுதியானவரா?” என்ற தலைப்பில் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியது.
யாரும் எதிர்பாராத வண்ணம் அந்தக் கலந்துரையாடல் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, அதில் கலந்து கொள்ள திடீரென மகாதீரும் அரங்கத்திற்குள் வந்தார். உடனே ஏற்பாட்டாளர்கள் அவரை மரியாதையாக அழைத்துச் சென்று முதலாவது முன்வரிசையில் அமரவைத்தனர்.
மகாதீர் வரும் வரையில் 93-வது வயதில் ஒருவர் இடைக்காலப் பிரதமராகச் சிறப்பாக செயல்பட முடியாது என தங்களின் வாதங்களை முன்வைத்த உரையாளர்கள், மகாதீர் வந்து அமர்ந்ததும், கொஞ்சம் அடக்கியே வாசித்தனர் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.