ஜார்ஜ் டவுன் – பினாங்கு இரண்டாவது பாலத்தில் இருந்து கடலில் குதித்த 28 வயது பெண்ணை, அவ்வழியாகச் சென்ற காவல்துறை துணைப் படையைச் சேர்ந்த காவலர் ஜைடி (வயது 52) தனது உயிரைப் பணயம் வைத்து மீட்டிருக்கும் சம்பவம் பலரையும் நெகிழ வைத்திருக்கிறது.
நேற்று புதன்கிழமை காலை 11.13 மணியளவில், சுல்தான் அப்துல் ஹாலிம் முவாட்சாம் ஷா பாலத்தில், 9.9 -வது கிலோமீட்டரில் நடந்த, இச்சம்பவம் குறித்துத் தங்களுக்கு அவசரத் தகவல் வந்ததாக அம்மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை தெரிவித்திருக்கிறது.
அப்பெண் பாலத்தில் இருந்து குதித்து பாலத்தின் தூணைப் பற்றிக் கொண்டு தத்தளித்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்து சேர்ந்த ஜைடி, உடனடியாக பாலத்தில் இருந்து தானும் குதித்து, அப்பெண்ணைக் காப்பாற்றப் போராடியிருக்கிறார்.
அப்போது கடல் அலைகளின் வேகம் அதிகரித்ததால், கிட்டத்தட்ட மூழ்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார். என்றாலும் அப்பெண்ணை காப்பாற்றும் முயற்சியில் கடுமையாகப் போராடிக் கொண்டிருந்த போது, கடற்படை மீட்புக் குழுவினரின் படகு வந்து இருவரையும் மீட்டிருக்கிறது.