Home Video “ரபிடா அசிசை தலைவர் பதவியிலிருந்து நீக்கச் சொன்னார்கள்” – டோனி பெர்னாண்டஸ்

“ரபிடா அசிசை தலைவர் பதவியிலிருந்து நீக்கச் சொன்னார்கள்” – டோனி பெர்னாண்டஸ்

1302
0
SHARE
Ad
தான் வெளியிட்ட காணொளியில் டோனி பெர்னாண்டஸ்

கோலாலம்பூர் –பொதுத் தேர்தலுக்கு முன்பாக ஏர் ஆசியா எக்ஸ் நிறுவனத்தின் தலைவரும் முன்னாள் அம்னோ அமைச்சருமான டான்ஸ்ரீ ரபிடா அசிசை அந்தத் தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கச் சொல்லி தன்னைக் கட்டாயப்படுத்தினார்கள் என ஏர் ஆசியா நிறுவனர் டோனி பெர்னாண்டஸ் கூறியிருக்கிறார்.

“ரபிடா நாளுக்கு நாள் பக்காத்தானுக்கு ஆதரவாக தனது பிரச்சாரத்தை சமூக ஊடகங்களிலும், தேர்தல் பிரச்சார மேடைகளிலும் அதிகரித்துக் கொண்டே போன நிலையில் அவரை தனது நிறுவனத்தின் பொறுப்புகளில் இருந்து நீக்க நான் வற்புறுத்தப்பட்டேன். எனினும் அது முறையல்ல என்பதால் நான் மறுத்து விட்டேன். ஆனாலும் எனக்கு பல முனைகளிலும் நெருக்குதல்கள் தரப்பட்டன. அதனால்தான் நான் வளைந்து கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது” என்றும் டோனி தான் வெளியிட்ட காணொளியில் தெரிவித்திருக்கிறார்.

நெருக்கடியான கட்டங்களில் ஓடி விடுபவன் நானல்ல என்றாலும், மலேசியர்களின் நலன்களுக்காக நான் பெற்றெடுத்த குழந்தையான ஏர் ஆசியாவைக் காப்பாற்றத் தான் அவ்வாறு முடிவெடுக்க நேர்ந்ததாகவும் டோனி வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டிருக்கிறார்.

#TamilSchoolmychoice

பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நெருங்கி வந்த வேளையில், தேசிய முன்னணிக்கு ஆதரவு தரும் வகையில் நடந்து கொண்டதற்காகவும், ஒரு வரலாற்று தருணத்தில் ஆளும் கட்சிக்கு வளைந்து கொடுத்ததற்காகவும் மலேசியர்களிடம் ஏர் ஆசியா நிறுவனத் தலைவர் டோனி பெர்னாண்டஸ், தான் வெளியிட்ட காணொளி ஒன்றின் வழி மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.

பொதுத் தேர்தலுக்கு சில நாட்கள் இருக்கும்போது, எப்போதும் சிவப்பு வண்ணத்தில் இருக்கும் ஏர் ஆசியா விமானம் ஒன்றை தேசிய முன்னணியின் நிறமாகப் பார்க்கப்படும் நீல வண்ணத்திற்கு மாற்றி அது தொடர்பான புகைப்படங்களையும், காணொளிகளையும் டோனி பெர்னாண்டஸ் வெளியிட்டார்.

அதே வேளையில், நஜிப்புடன் ஒரே விமானத்தில் அருகருகே அமர்ந்து பயணம் செய்வது போன்ற காணொளிகளும் வெளியிடப்பட்டன.

இதைத் தொடர்ந்து, இணைய, சமூக ஊடகங்களில் பொதுமக்கள் டோனி பெர்னாண்டசை கடுமையான கண்டனங்களோடு சாடினர்.

14-வது பொதுத் தேர்தலில் வரலாறு காணாத தோல்வியை தேசிய முன்னணி சந்தித்தது. தன்மீது எழுந்த கண்டனங்களுக்கு பதில் கூறும் விதமாகத்தான் டோனி பெர்னாண்டஸ் இந்த காணொளியை வெளியிட்டிருக்கிறார்.