கோலாலம்பூர் – மே 25 மற்றும் 26 ஆகிய இரு நாட்களுக்கு ஹாங்காங்கில் நடைபெறவிருக்கும் அனைத்துலக ஆங்கில நாடகப் போட்டியில் கலந்து கொள்ளும் பொருட்டு, ஜோகூர், மாசாய் தமிழ்ப் பள்ளியின், மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் அடங்கிய குழுவினர் நேற்று வியாழக்கிழமை (மே 24) கோலாலம்பூர் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டனர்.
அனைத்துலக அளவில் ஆங்கில நாடகப் போட்டிகளை ஒவ்வோர் ஆண்டும் ‘டிரமதிச் ஆங்கில நாடக நிறுவனம்’ நடத்தி வருகிறது. மாணவர்களுக்கு நாடக வடிவிலான மனமகிழ் கல்வியைப் போதிக்கும் கல்வித் திட்டத்தைக் கொண்ட நிறுவனம் இது.
இந்த ஆண்டு இப்போட்டியில் ஹாங்காங், சீனா, மாக்காவ், தைவான், மலேசியா, இந்தியா போன்ற நாடுகள் பங்கேற்கின்றன.
மலேசியாவிலிருந்து ஜோகூர் மாநிலத்திலுள்ள மாசாய் தமிழ்ப்பள்ளி இறுதி சுற்றுக்குத் தேர்வு பெற்றுள்ளது.
இந்தத் இறுதிச் சுற்றில் தேர்வு செய்யப்பட்ட நாடகக் குழுவினர், நாடகத்தை நேரடியாக 15 நிமிடம் நடித்து ஹாங்காங்கில் நீதிபதிகள் முன்னிலையில் அரங்கேற்ற வேண்டும். அதில் வெற்றியாளர்கள் நிர்ணயிக்கப் படுவர்.
ஹாங்காங் செல்லும் நாடகக் குழு
11 மாணவர்கள், 4 ஆசிரியர்கள் (ஆசிரியை கஸ்தூரி, திரு கணேஷ், ஆசிரியை சித்தி ஆய்ஷா, ஆசிரியை கலைவாணி) 1 பயிற்றுனர் (திரு ஓத்மான், JKKN), 12 பெற்றோர்கள், ஆகியோர் இந்த நாடகப் போட்டியில் கலந்து கொள்ள நேற்று ஹாங்காங் புறப்பட்டுச் சென்றனர்.
போட்டியை முடித்துக் கொண்டு மே 29-ஆம் தேதி ஹாங்காங்கிலிருந்து நாடு திரும்புவர்.
அனைத்துலக அரங்கிலும் – அதிலும் ஆங்கில நாடகப் போட்டியிலும் – மலேசியத் தமிழ்ப் பள்ளியின் திறனைக் காட்டப் புறப்பட்டிருக்கும் மாசாய் தமிழ்ப் பள்ளியின் குழுவினருக்கு – வெற்றி வாகை சூட – நாமும் நமது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வோம்.