Home நாடு அம்பிகா: “அரசு அமைப்புகளின் மறுசீரமைப்புக் குழு பணிகளில் தீவிரம்”

அம்பிகா: “அரசு அமைப்புகளின் மறுசீரமைப்புக் குழு பணிகளில் தீவிரம்”

1079
0
SHARE
Ad
அம்பிகா சீனிவாசன்

கோலாலம்பூர் – மலேசிய அரசாங்கத்தின் அரசாங்க அமைப்புகளை மறுசீரமைக்க உருவாக்கப்பட்ட குழுவின் பணிகள் தீவிரமாகத் தொடர்கின்றன என அக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான டத்தோ அம்பிகா சீனிவாசன் அறிவித்துள்ளார்.

துன் டாயிம் தலைமையிலான மூத்த மேதகையாளர்களின் குழுவின் கீழ் பல்வேறு சீரமைப்பு மற்றும் விசாரணைக் குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

அவற்றில் ஒன்றுதான் அரசு அமைப்புகளுக்கான மறுசீரமைப்புக் குழு. ஓய்வு பெற்ற மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதியும் சுஹாகாம் எனப்படும் மனித உரிமை ஆணையத்தின் முன்னாள் ஆணையர்களில் ஒருவருமான டத்தோ கே.சி.வோஹ்ரா இந்தக் குழுவுக்குத் தலைமையேற்றுள்ளார்.

#TamilSchoolmychoice

ஐந்து பேர் கொண்ட இந்தக் குழுவில் டத்தோ அம்பிகா சீனிவாசன், ஓய்வு பெற்ற மேல்முறையீட்டு நீதிமன்ற முன்னாள் நீதிபதி டத்தோ மா வெங் குவாய், தேசிய நாட்டுப் பற்றாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரிகேடியர் ஜெனரல் (ஓய்வு) டத்தோ முகமட் அர்ஷாட் ராஜி, மலாயாப் பல்கலைக் கழகத்தின் சட்டத் துறை பேராசிரியர் டத்தோ டாக்டர் ஷாட் சலீம் பாருக்கி ஆகியோர் இடம் பெற்றிருக்கின்றனர்.

அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் அலுவலகம், நீதிபதிகள் மற்றும் நீதித் துறை பொறுப்பாளர்கள் நியமனங்கள், காவல் துறை, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், தேர்தல் ஆணையம் ஆகிய அமைப்புகளையும் அம்சங்களையும் மறு ஆய்வு செய்து மறுசீரமைப்பு செய்யவும் அவற்றின் சுதந்திரத் தன்மையை மறு உறுதி செய்யவும் இந்தக் குழு திட்டமிடும்.

அடிப்படை மனித உரிமைகளைப் பாதிக்கும் சட்டங்களையும் இந்தக் குழு ஆராயும். பொய்ச் செய்திகள் சட்டம், அச்சகம் மற்றும் பதிப்பாளர்கள் சட்டம், அதிகாரத்துவ இரகசியச் சட்டத்தின் சில பகுதிகள் ஆகியவை குறித்தும் இந்தக் குழு ஆராய்ந்து பரிந்துரைகள் வழங்கும்.

நாடு முழுமையிலும் இருந்து ஏராளமான பரிந்துரைகளையும், ஆவணங்களையும் தாங்கள் பெற்று வருவதாகவும் அனைத்தையும் தாங்கள் கூட்டங்கள் முழுமையாகப் பரிசீலித்து வருவதாகவும் அம்பிகா கூறியுள்ளார்.