கோலாலம்பூர் – கடந்த மே 9-ம் தேதி நடைபெற்ற 14-வது பொதுத்தேர்தலில், மஇகா போட்டியிட்டு வென்ற 2 நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் 1 சட்டமன்றத் தொகுதி – ஆகிய தொகுதிகளின் தேர்தல் முடிவுகளுக்கு எதிராக வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளதால், அந்தத் தொகுதிகளில் மீண்டும் மறுதேர்தல் நடக்கக் கூடிய சூழ்நிலை ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதி முடிவுக்கு எதிராக அங்கு ஜசெக சார்பில் போட்டியிட்ட வழக்கறிஞர் எம்.மனோகரன் அந்தத் தேர்தல் வெற்றி செல்லாது என ஏற்கனவே தேர்தல் மனுவைச் சமர்ப்பித்துள்ளார்.
அதைத் தொடர்ந்து பெர்சாத்து கட்சி போட்டியிட்ட 4 நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் 3 சட்டமன்றத் தொகுதிகளின் முடிவுகளுக்கு எதிராக தேர்தல் வழக்கு மனுக்களைப் பதிவு செய்திருக்கிறது.
அந்தத் தொகுதிகளில் தாப்பா நாடாளுமன்றத் தொகுதியும் ஒன்றாகும். இங்கு மஇகாவின் சார்பில் டத்தோஸ்ரீ எம்.சரவணன் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
பெர்சாத்து கட்சி ஜோகூர் மாநிலத்தின் கஹாங் சட்டமன்றத் தொகுதி முடிவுக்கு எதிராகவும் தேர்தல் வழக்கைச் சமர்ப்பித்துள்ளது.
NEGERI | JOHOR |
---|---|
DUN | N.31 – KAHANG |
PARTI MENANG | BN |
MAJORITI UNDI | 2861 |
NAMA PADA KERTAS UNDI | BIL. UNDI |
NOORLIHAN BINTI ARIFFIN (PKR) | 7907 |
R. VIDYANANTHAN (BN) | 10768 |
கஹாங் சட்டமன்றத்தில் மஇகாவின் சார்பில் போட்டியிட்ட ஆர்.வித்தியானந்தன் 2,861 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இந்நிலையில் மேற்குறிப்பிட்ட மூன்று மஇகா வெற்றி பெற்ற தொகுதிகளின் முடிவுகள் மீதான வழக்குகள் நடைபெற்று அந்த வழக்குகளில் பாதகமான தீர்ப்பு வழங்கப்பட்டால் மீண்டும் இடைத் தேர்தல்களின் வழி அந்தத் தொகுதிகளில் போட்டியிடக் கூடிய இக்கட்டான நிலைமை மஇகாவுக்கு ஏற்படலாம்.
பினாங்கிலுள்ள தாசேக் குளுகோர், நெகிரி செம்பிலான் மாநிலத்தின் ஜெம்போல், பேராக் மாநிலத்தின் தாப்பா மற்றும் பாகான் செராய் ஆகிய 4 நாடாளுமன்றத் தொகுதிகளிலும், பேராக் மாநிலத்தைச் சேர்ந்த லூபோ மெராபு மற்றும் சங்காட் ஜோங், ஜோகூரைச் சேர்ந்த காஹாங் சட்டமன்றத் தொகுதிகளிலும் தேர்தல் முடிவுகளுக்கு எதிராக பெர்சாத்து கட்சி தேர்தல் வழக்கு தொடுத்து மனுக்களை அளித்திருக்கிறது.
நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள ரந்தாவ் சட்டமன்றத் தொகுதியில் அம்மாநிலத்தின் முன்னாள் மந்திரி பெசார் முகமட் ஹசான் போட்டியின்றி வெற்றி பெற்றதற்கு எதிராக அங்கு போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட ஸ்ரீராம் சின்னசாமி தேர்தல் வழக்கு மனுவைத் தொடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.