கோலாலம்பூர் – அம்னோ தலைமையகம் மற்றும் பல்வேறு மாநில அம்னோ மற்றும் அந்தக் கட்சி தொடர்புடைய வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது சரவாக்கின் எஸ்யுபிபி கட்சியின் வங்கிக் கணக்கும் முடக்கப்பட்டிருப்பதாக அந்தக் கட்சியின் தலைவர் டத்தோ டாக்டர் சிம் குயி ஹியான் தெரிவித்துள்ளார்.
சரவாக் யுனைடெட் பியூபல்ஸ் பார்ட்டி (Sarawak United People’s Party – SUPP) என்ற பெயர் கொண்ட அந்தக் கட்சி 14-வது பொதுத் தேர்தலுக்கு முன்பு வரை தேசிய முன்னணியின் உறுப்பியக் கட்சியாகச் செயல்பட்டு வந்தது.
தற்போது தேசிய முன்னணிக் கூட்டணியிலிருந்து பிரிந்து எஸ்யுபிபி மற்றும் சரவாக் மாநிலத்தில் இயங்கும் இதர முன்னாள் தேசிய முன்னணி உறுப்பியக் கட்சிகள் கபுங்கான் பார்ட்டி சரவாக் என்ற புதிய கூட்டணியைத் தோற்றுவித்துள்ளன.
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் ஜூன் 28-ஆம் தேதி அம்னோ தலைமையகம் மற்றும் சிலாங்கூர் மாநில அம்னோவின் வங்கிக் கணக்குகளை முடக்கியதாக ஊடகங்கள் தெரிவித்தன.
எஸ்யுபிபி விவகாரம் தொடர்பில் ஊழல் தடுப்பு ஆணையத்துடன் தங்களின் முழுமையான ஒத்துழைப்பை வழங்கவிருப்பதாக அக்கட்சியின் தலைவர் சிம் குயி ஹியான் மேலும் தெரிவித்துள்ளார்.