Home நாடு நஜிப் வழக்கு நிதி – 2 இலட்சத்தைத் தாண்டியது

நஜிப் வழக்கு நிதி – 2 இலட்சத்தைத் தாண்டியது

1035
0
SHARE
Ad

கோலாலம்பூர் -நேற்று வெள்ளிக்கிழமை (ஜூலை 6)  பிற்பகலுடன் நஜிப் துன் ரசாக் மீதான வழக்கு நிதியில் மலேசிய ரிங்கிட் 204,393 சேர்ந்திருக்கிறது.

நஜிப் ஆதரவாளர்கள் குழுமத்திற்குத் தலைமையேற்கும் அம்னோ கூட்டரசுப் பிரதேச இளைஞர் பகுதித் தலைவர் ரஸ்லான் ரஃபி, ரொக்கமாகத் தங்கள் வசம் 86,282 ரிங்கிட் கையிருப்பில் இருப்பதாகவும் எஞ்சிய 118,211 ரிங்கிட் இந்த நிதிக்கெனத் தொடங்கப்பபட்ட வங்கிக் கணக்கில் சேர்ப்பிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

சரியாக 2 மாதங்களுக்கு முன்னால் சகல அதிகாரங்களும் படைத்த நாட்டின் பலம் வாய்ந்த பிரதமராக உலா வந்த நஜிப் பொதுத் தேர்தலில் தோல்வியடைந்ததும், அவர் மீதான ஊழல் வழக்குகள் முடுக்கி விடப்பட்டன.

#TamilSchoolmychoice

நஜிப் தொடர்புடைய இல்லங்களில் கைப்பற்றப்பட்டவைகளின் மதிப்போ 1 பில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகம் எனக் கூறியது காவல் துறை.

ஜூலை 4 நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்ட நஜிப்பிற்கு 1 மில்லியன் ரிங்கிட் உத்தரவாதத் தொகை (ஜாமீன்) என நிர்ணயித்தது நீதிமன்றம்.

அவரது புதல்வரும் புதல்வியும் அவருக்கு உத்தரவாதக் கையெழுத்திட முன்வர 5 இலட்சம் ரிங்கிட்டும் உடனடியாகச் செலுத்தப்பட்டது.

எஞ்சிய 5 இலட்சம் ரிங்கிட் உத்தரவாதத் தொகையை எதிர்வரும் புதன்கிழமை ஜூலை 11-ஆம் தேதிக்குள் செலுத்த அவருக்கு அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது.

தனது வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டிருப்பதால் உத்தரவாதத் தொகைக்கு பதிலாக தனது இல்லங்கள் மீதான நிலப்பட்டாக்களை அடமானம் வைக்கத் தயாராக இருப்பதாக நஜிப் கூறியிருக்கிறார்.

இந்நிலையில் அவருக்கு ஆதரவு தரும் அவரது ஆதரவாளர்களும், அம்னோவினரும் சட்ட உதவி நிதி ஒன்றைத் தொடக்கியுள்ளனர்.