கோலாலம்பூர் – மஇகாவின் 10-வது தேசியத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் முன்னால் விஸ்வரூபம் எடுத்து நிற்கும் முக்கிய சவால் மஇகா இனியும் தேசிய முன்னணியில் தொடர வேண்டுமா என்பதுதான்.
இன்று தேசியத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய விக்னேஸ்வரன், இரண்டு மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற 14-வது பொதுத் தேர்தலில் பெரும் தோல்வியைச் சந்தித்த மஇகாவின் அடிமட்டக் கட்டமைப்பை மறுசீரமைப்பது எப்படி, மேம்படுத்துவது எப்படி என்பதில் கட்சி முதல் கட்டமாக கவனம் செலுத்தும் என அறிவித்தார்.
அடுத்த கட்டமாக, மஇகா தேசிய முன்னணியில் உறுப்பியக் கட்சியாகத் தொடர்வதா என்ற முடிவை எடுப்பது தனது கையில் இல்லை என்றும் மஇகா மத்திய செயலவை அது குறித்து விவாதித்து முடிவெடுக்கும் என்றும் மேலும் தெரிவித்தார்.
இன்று சனிக்கிழமை நடைபெற்ற மஇகா தேசியத் தலைவருக்கான வேட்புமனுத் தாக்கலின்போது வேறு வேட்பாளர்கள் யாரும் போட்டியிடாததைத் தொடர்ந்து விக்னேஸ்வரன் 10-வது மஇகா தேசியத் தலைவராக இன்று அறிவிக்கப்பட்டார்.