
கோலாலம்பூர் – இன்று சனிக்கிழமை அம்னோ தேசியத் தலைவர் அகமட் சாஹிட் ஹமிடியால் அம்னோ உச்சமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட முன்னாள் அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் டான்ஸ்ரீ அபாண்டி அலி திடீரென அந்தப் பதவியை நிராகரித்துள்ளார்.
அம்னோவில் இணைந்து பணியாற்றுவது தனது உரிமை என தனது நியமனத்திற்குப் பின்னர் கூறியிருந்த அபாண்டி அலி திடீரென மனம் மாறி அம்னோ உச்சமன்ற உறுப்பினர் நியமனத்தை மறுத்திருக்கிறார்.
இன்று அம்னோ உச்சமன்ற உறுப்பினர்களாக நியமிக்கப்பட்ட 11 பேரில் அபாண்டி அலியும் ஒருவராவார்.
நீதிபதியாகப் பணியாற்றிய காலத்தில் தான் வழங்கிய தீர்ப்புகள் மற்றும் அரசாங்கத் தலைமை வழக்கறிஞராகத் தான் எடுத்த முடிவுகள் ஆகியவை தனது அம்னோ தொடர்பால் தவறாகப் புரிந்து கொள்ளப்படும் என ஆழ்ந்த சிந்தனைக்குப் பின்னர் உணர்ந்திருப்பதால் அந்த நியமனத்தைத் தான் மறுத்திருப்பதாக அபாண்டி அலி மேலும் தெரிவித்திருக்கிறார்.