கோலாலம்பூர் – மஇகாவுக்கான தேசியத் தலைவருக்கான தேர்தல் எந்தவித ஆர்ப்பாட்டமுமின்றி சுமுகமாக நடைபெற்று முடிந்து டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் 10-வது தேசியத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நிலையில், கட்சியின் அடுத்த தேசியத் துணைத் தலைவர் யார் என்பதை நோக்கி அனைவரின் பார்வையும் தற்போது திரும்பியுள்ளது.
நடப்பு தேசியத் துணைத் தலைவரான டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி மீண்டும் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிட மாட்டார் என மஇகா வட்டாரங்களும் அவருக்கு நெருக்கமான அரசியல் வட்டாரங்களும் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். இதுவரையில் அவரிடமிருந்து அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வரவில்லை எனினும், அவர் மீண்டும் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதில் அதிகமாக ஆர்வம் காட்டவில்லை எனக் கூறப்படுகிறது.

இதற்கிடையில் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் துணைத் தலைவர் பதவியைக் குறிவைத்து மும்முரமாக இயங்கி வருகிறார். அவருக்கு நெருக்கமான வட்டாரங்களில் அவர் அடுத்த துணைத் தலைவராக வருவதற்கான பிரச்சாரங்கள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
தேசியத் தலைவர் தேர்தலில் விக்னேஸ்வரனுக்கு ஆதரவு வழங்கிய சரவணன் துணைத் தலைவருக்குப் போட்டியிடுவது ஏறத்தாழ உறுதியாகிவிட்ட நிலையில், இப்போது எழுந்துள்ள கேள்வி அவருக்குப் போட்டியிருக்குமா அல்லது அவரும் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்படுவாரா என்பதுதான்!
தேவமணி மீண்டும் துணைத் தலைவருக்கு போட்டியிட மாட்டார் என்ற சூழ்நிலை உருவாகுமானால், சரவணனை எதிர்த்து துணைத் தலைவருக்கான போட்டியில் குதிக்கக் கூடிய ஒரே வேட்பாளராக டத்தோ சோதிநாதன் பார்க்கப்படுகிறார். சரவணன், சோதிநாதன் இருவருமே தற்போது நியமன மத்திய செயலவை உறுப்பினர்களாக இருந்து வருகின்றனர்.
எனினும், சோதிநாதன் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதைப் பற்றி இதுவரையில் எந்தவிதத்திலும் கோடிகாட்டவில்லை. அதே வேளையில் அவரைத் தவிர, மஇகாவின் அடுத்த நிலைத் தலைவர்கள் யாரும் துணைத் தலைவருக்குப் போட்டியிட ஆர்வம் காட்டவில்லை. அனைவரும் தேசிய உதவித் தலைவர் பதவியையே குறிவைத்திருக்கின்றனர்.
எனவே, சோதிநாதன் துணைத் தலைவர் போட்டியிலிருந்து ஒதுங்கிக் கொண்டால், சரவணன் தேசியத் துணைத் தலைவராக ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
-இரா.முத்தரசன்