கோலாலம்பூர் – செராஸ் தாமான் மலூரியில் உள்ள ஓர் உல்லாச இரவு விடுதியின் முன்னால் கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 13) இரவு துப்பாக்கிக்காரர்கள் சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இரவு 9.30 மணியளவில் நடத்தப்பட்ட இந்தத் துப்பாக்கிச் சூட்டில் யாரும் காயமடையவில்லை. எனினும் அந்த வளாகத்தைப் பரிசோதித்த காவல் துறையினர், பயன்படுத்தப்பட்ட 26 துப்பாக்கிக் குண்டுகளை கண்டெடுத்தனர்.
துப்பாக்கிக் குண்டுகள் கிடந்த இடத்திலிருந்து சற்று தொலைவில் இரண்டு நபர்களின் புகைப்படங்களைக் கொண்ட தாள்கள் வேண்டுமென்றே தரையில் வீசப்பட்டு சிதறிக் கிடந்தன.
கடந்த ஜூன் 24-ஆம் தேதி புக்கிட் பிந்தாங்கில் நடைபெற்ற இதேபோன்ற துப்பாக்கிச் சூட்டுக்கும் இந்தப் புதிய சம்பவத்துக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் காவல் துறையினர் ஆராய்ந்து வருவதாக கோலாலம்பூர் காவல் துறையின் தலைவர் டத்தோஸ்ரீ மஸ்லான் லாசிம் தெரிவித்திருக்கிறார்.
அந்த வட்டாரத்தில் இயங்கி வரும் மறைக் காணி ஒளிப்பதிவுகள் (சிசிடிவி-CCTV) மூலம் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களை அடையாளம் காணும் முயற்சிகளும் மேற்கொள்ளப்படுவதாக காவல் துறையினர் அறிவித்துள்ளனர்.