கோலாலம்பூர் – இன்று திங்கட்கிழமை தொடங்கிய 14-வது நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத் தொடரில் நாடாளுமன்ற அவைத் தலைவராக டத்தோ முகமது அரிப் முகமது யூசோப் (படம்) பிரதமர் துன் மகாதீரால் முன் மொழியப்பட்டு பதவி ஏற்றுக் கொண்டார்.
முன்னாள் நீதிபதியான முகமது அரிப் பெயர் முன்மொழியப்பட்டபோது, அம்னோ தரப்பிலிருந்து சில எதிர்ப்புக் குரல்கள் ஒலித்தன. அவைத் தலைவர் நியமனத்திற்கு ஆட்சேபம் தெரிவித்து சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
அவர்களுக்கு பதிலளிக்கும் விதமாக நாடாளுமன்ற நடப்புகளைத் தொடக்கி வைத்து உரையாற்றிய நாடாளுமன்ற செயலாளர் டத்தோ ருஸ்மி பிந்தி ஹம்சா புதிய நாடாளுமன்ற அவைத் தலைவரை நியமிக்கும் பிரதமரின் கடிதத்தைத் தான் ஜூலை 2-ஆம் தேதி கிடைக்கப் பெற்றதாக அறிவித்தார்.
நாடாளுமன்ற அவைத் தலைவர் நாடாளுமன்றம் தொடங்கும் 14 நாட்களுக்கு முன்னதாக நியமிக்கப்பட வேண்டும் என்றும் அவ்வாறு நியமிக்கப்படாத காரணத்தால் இன்றைய நாடாளுமன்ற கூட்டத் தொடர் ஒத்தி வைக்கப்பட வேண்டும் என்றும் அம்னோ தரப்புகள் அறைகூவல் விடுத்து வந்தனர்.
டத்தோ ருஸ்மியின் அறிவிப்பின் மூலம் அவைத் தலைவர் நியமனம் 14 நாட்களுக்கு முன்பாகவே செய்யப்பட்டிருப்பது உறுதியானதும், புதிய நாடாளுமன்ற அவைத் தலைவரை தற்போது நாடாளுமன்றத்திற்குள் நுழைய அழைப்பு விடுப்பதாக ருஸ்மி அறிவித்தார்.
புதிய அவைத் தலைவர் முகமட் அரிப் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்கவில்லை என்பதால் அவரை நாடாளுமன்றத்திற்குள் நுழைய முறைப்படி அழைப்பு விடுத்து, அவர் உள்ளே நுழைய அனுமதிக்க வேண்டும் என்பது நடைமுறையாகும். நாடாளுமன்றச் செயலாளரின் அழைப்பைத் தொடர்ந்து நாடாளுமன்ற அவைக்குள் நுழைந்த முகமது அரிப்புக்கு அவைத் தலைவருக்கான அங்கி அணிவிக்கப்பட்டு, அவர் பதவிப் பிரமாணமும் எடுத்துக் கொண்டார்.
அதன் பின்னர் அவர் நாடாளுமன்ற அவைத் தலைவராகத் தனது முதல் உரையை முகமது அரிப் நாடாளுமன்றத்தில் வழங்கினார். நாடாளுமன்றத்தின் கௌரவத்தையும், பெருமையையும் நிலை நாட்டுவேன் என்றும் ஜனநாயக மரபுகளின்படி நாடாளுமன்ற விவாதங்களில் நடுநிலையையும், சுதந்திரத்தையும் கொண்டு வருவேன் என்றும் அவர் உறுதி கூறினார்.
இதற்கிடையில், முகமது அரிப்பின் நியமனத்திற்கு ஆட்சேபணை தெரிவித்து எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.