ஜோகூர் பாரு – (14-வது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் ஜோகூர் மாநிலத்தின் புதிய ஆட்சிக் குழு உறுப்பினராக நியமனம் பெற்றுள்ள ஜசெகவின் பெக்கோக் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் எஸ்.இராமகிருஷ்ணன் செல்லியல் ஊடகத்திற்கு வழங்கிய சிறப்பு நேர்காணலின் நிறைவுப் பகுதி)
ஜோகூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினராக கடந்த மே 12-ஆம் தேதி பதவியேற்றது முதல் சந்தித்து வரும் சவால்கள் – அனுபவங்கள் என்ன என்ற கேள்விக்குப் பின்வருமாறு கூறுகிறார் இராமகிருஷ்ணன்:
“ஆட்சி அதிகாரத்தை பக்காத்தான் கூட்டணி கைப்பற்றியிருக்கிறதே தவிர, ஜோகூர் மாநில அரசாங்கத்தின் அதிகாரிகள், ஊழியர்கள் கொண்ட கட்டமைப்பு முன்பு இருந்தது போல் அப்படியே தொடர்ந்து இருக்கிறது. எனவே, அவர்களுடன்தான் நாங்கள் பணியாற்ற வேண்டியதிருக்கிறது. மேலும், நாங்கள் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர்களாக மாநில அரசாங்கத்தில் பணியாற்றினாலும், எங்களுக்கான பல துறைகள் மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன. மத்திய அரசாங்கத்திலும் அரசு ஊழியர்களின் கட்டமைப்பு முன்பு இருந்தவர்களைக் கொண்டுதான் இயங்கி வருகிறது. இதையெல்லாம் குறையாகச் சொல்லவில்லை. தற்போதிருக்கும் யதார்த்த நிலையைத்தான் எடுத்துக் கூறுகிறேன். இதன் காரணமாக நாங்கள் நடப்பு கட்டமைப்புடன் இணைந்து பணியாற்றி எங்களின் புதிய இலக்குகளை, பக்காத்தான் கூட்டணியின் திட்டங்களை நிறைவேற்ற வேண்டிய சவாலான சூழ்நிலையில் இருக்கிறோம். இதனால் இரு தரப்புகளுக்கும் இடையில் நிறைய புரிந்துணர்வும் தேவைப்படுகிறது. எங்களின் இலக்குகளை – தேர்தல் வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவோம் – என்ற நம்பிக்கையும் எங்களுக்கிருக்கிறது” என்று நடப்பு சூழலை விவரிக்கிறார் இராமகிருஷ்ணன்.
இராமகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டுள்ள ஆட்சிக் குழு உறுப்பினர் பொறுப்பின் கீழ் மனித வளம், பயனீட்டாளர் விவகாரம், ஒற்றுமைத் துறை ஆகிய துறைகள் இடம் பெற்றுள்ளன. ஆட்சிக் குழுவின் ஒரே இந்தியர் பிரதிநிதியாக இருப்பதால் இந்திய சமுதாயம் தொடர்புடைய விவகாரங்களும் இராமகிருஷ்ணனின் பொறுப்பின் கீழ் வருகிறது.
“ஆட்சிக் குழு உறுப்பினர் பொறுப்பேற்றது முதல் இந்திய சமுதாயத்தின் பல பிரிவினர் தொடர்ந்து எனது அலுவலகத்திற்கு வந்து தங்களின் பிரச்சனைகளை எடுத்துக் கூறி வருகின்றனர். இதன் மூலம் அவர்களின் பிரச்சனைகளை அறிந்து கொள்வதோடு, அதற்கான தீர்வுகளைக் காணும் வழிமுறைகளையும் நாங்கள் ஆராய்ந்து வருகிறோம். இந்தியர்களின் எதிர்பார்ப்பும் அதிகமாகவே இருக்கிறது. குறிப்பாக நமது ஆலயங்களில் பல பிரச்சனைகள் இருக்கின்றன. எனது இலக்கு என்னவென்றால் ஒவ்வொரு ஆலயத்தையும் ஒரு சமூக செயல்பாட்டு மையமாக உருமாற்ற வேண்டும் என்பதுதான். இதனையே நான் சந்திக்கும் ஆலயப் பொறுப்பாளர்களிடமும், கலந்து கொள்ளும் ஆலயக் கூட்டங்களிலும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். குறுகிய காலத்திலேயே எங்களின் நோக்கத்தைப் புரிந்து கொண்டுள்ள ஆலய நிர்வாகத்தினர் ஆங்காங்கு சில நடவடிக்கைகள் எடுத்து வருவதையும் பார்க்கிறேன்” என்கிறார் இராமகிருஷ்ணன்.
இதற்கிடையில் அவர் ஆட்சிக் குழு உறுப்பினராகப் பொறுப்பேற்றுள்ள மனித வளம், பயனீட்டாளர் பிரிவு, ஒற்றுமைத் துறை ஆகிய துறைகள் யாவும் மத்திய அரசாங்கத்தின் இலாகாக்களின் ஒத்துழைப்போடு நிறைவேற்ற வேண்டிய செயல் நடவடிக்கைகளைக் கொண்டவை. எனவே, மத்திய அரசாங்க இலாகாக்கள், அதிகாரிகளுடனும் இணைந்து பணியாற்ற வேண்டியிருக்கிறது என்பதையும் இராமகிருஷ்ணன் சுட்டிக் காட்டினார்.
ஜோகூர் பாருவில் தனது ஆட்சிக் குழு அலுவலகம் அமைந்திருக்க, சுமார் ஒன்றரை மணி நேர பயண தூரத்தில் அவரது பெக்கோக் தொகுதி அமைந்திருக்கிறது. ஜோகூர் மாநிலமும் பெரிய மாநிலமாகும். இங்கு 7 விழுக்காடு மக்கள் தொகையினர் இந்தியர்களாவர்.
எனவே, தனது தொகுதி மக்களின் பிரச்சனைகளையும் கவனிக்க வேண்டிய கடமை இராமகிருஷ்ணனுக்கு இருப்பதால், இத்தகைய மிகவும் சவாலான சூழ்நிலையில், ஜோகூர் மாநிலத்தின் இந்தியர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப, அவர்களுக்கான மேம்பாட்டுத் திட்டங்களில் புதிய அணுகுமுறைகளையும், வியூகங்களையும் வகுத்து வருவதாகவும் கூறுகிறார் இராமகிருஷ்ணன்.
சமுதாய நலனுக்காக அடுத்து என்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதில், அரசு சார்பற்ற இந்திய இயக்கங்களின் கருத்துகளையும், ஆலோசனைகளையும் பெறத் தொடங்கியிருக்கும் இராமகிருஷ்ணன், ஜோகூரில் செயல்பட்டு வரும் தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தின் இந்திய விரிவுரையாளர்கள் சிலரின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் கேட்டறிந்துள்ளார். இதன் மூலம் ஜோகூர் மாநில இந்திய சமுதாயத்திற்கான திட்டங்களில் புத்தாக்கத்தையும், புதிய அணுகுமுறைகளையும் கொண்டுவர முடியும் என நம்பிக்கையோடு கூறி நேர்காணலை நிறைவு செய்தார் இராமகிருஷ்ணன்.
-இரா.முத்தரசன்
தொடர்புடைய முந்தைய கட்டுரை:
“ஜோகூர் இந்தியர்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்போம்” – இராமகிருஷ்ணன் நேர்காணல் (காணொளி)
– “ஜோகூர் இந்தியர்களின் மேம்பாட்டுக்கு புதிய அணுகுமுறைகள்” – இராமகிருஷ்ணன் நேர்காணல் (1)
–