புத்ரா ஜெயா – 1எம்டிபி விவகாரத்தில் தேடப்படும் கோடீஸ்வரர் லோ தெக் ஜோ மற்றும் அவரது தந்தை ஆகிய இருவருக்கும் எதிராக புத்ரா ஜெயா அமர்வு நீதிமன்றம் (செஷன்ஸ் கோர்ட்) நேற்று வெள்ளிக்கிழமை கைது ஆணை பிறப்பித்தது.
இந்தக் கைது ஆணைக்கான விண்ணப்பத்தை காவல் துறையும், அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் அலுவலகமும் இணைந்து சமர்ப்பித்தனர்.
இந்தத் தகவலை உறுதிப்படுத்திய காவல் துறைத் தலைவர் டான்ஸ்ரீ புசி ஹருண், இந்த கைது ஆணையைத் தொடர்ந்து இண்டர்போல் எனப்படும் அனைத்துலகக் காவல் துறையுடன் இணைந்து ஜோ லோவைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்படும் எனத் தெரிவித்தார்.
ஜோ லோ மற்றும் அவரது தந்தை மீது கள்ளப் பண பரிமாற்றம், பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிரான சட்டம் ஆகிய சட்டங்களின் அடிப்படையில் நேற்றைய நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதைத் தொடர்ந்து அவர்களுக்கு எதிரான கைது ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன.