Home நாடு “பிகேஆர் கட்சியை இந்தியர் கட்சியாக பெயர் மாற்றிக் கொள்ளுங்கள்” – அன்வாருக்கு விக்னேஸ்வரன் சவால்

“பிகேஆர் கட்சியை இந்தியர் கட்சியாக பெயர் மாற்றிக் கொள்ளுங்கள்” – அன்வாருக்கு விக்னேஸ்வரன் சவால்

867
0
SHARE
Ad

கோலாலம்பூர் – மஇகாவை விட அதிகமான உறுப்பினர்களை தனது பிகேஆர் கட்சி கொண்டுள்ளது என டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் அண்மையில் கூறியிருந்ததற்கு மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் பதிலடி கொடுத்திருக்கிறார்.

“அப்படியானால், அதிகமான இந்தியர்களை உறுப்பினர்களாகக் கொண்ட கட்சி என்ற முறையில், அதைப் பிரதிபலிக்கும் வகையில் பிகேஆர் கட்சியின் பெயரை இந்தியர் கட்சியாக மாற்றிக் கொள்ளுங்கள்” என விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.

“அன்வார் கூறுவது உண்மைதான். பிகேஆர் கட்சியில் அதிகமான இந்தியர்கள் இருக்கிறார்கள். நானும் அது குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறேன். எனவே கட்சியின் பெயரையும் இந்தியர் கட்சியாக மாற்றிக் கொள்ள அவருக்கு ஆலோசனை கூறுகிறேன்” என விக்னேஸ்வரன் கூறியதாக மலேசியாகினி செய்தி வெளியிட்டுள்ளது.

#TamilSchoolmychoice

“அதிகமான இந்தியர்கள் உறுப்பினர்களாக இருப்பதால், கட்சியின் துணைத் தலைவர் பதவியை இந்தியர் ஒருவருக்கு அன்வார் வழங்க வேண்டும்” என்றும் விக்னேஸ்வரன் கிண்டலாகக் கூறியிருக்கிறார்.

கடந்த புதன்கிழமை (ஆகஸ்ட் 22) பெட்டாலிங் ஜெயாவிலுள்ள பிகேஆர் கட்சித் தலைமை அலுவலகத்தின் அந்தக் கட்சியின் இந்தியத் தலைவர்களோடு சந்திப்புக் கூட்டம் ஒன்றை நடத்திய பின்னர் பேசிய அன்வார் அதிகாரபூர்வமாக மஇகாவை விட பிகேஆர் கட்சியின் அதிகமான இந்தியர்கள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள் எனக் கூறியதாக ஊடகங்கள் தெரிவித்திருந்தன.