சென்னை, மார்ச் 29- தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா சுயநினைவிழந்து விட்டார் என்றும் தமிழகத்தின் முக்கியத் தலைவர்கள் படிப்பறிவு இல்லாத காரணத்தால் சுயமாக சிந்திக்காமல் பேசுகிறார்கள் என்றும் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி அதிரடியாக கருத்து வெளியிட்டுள்ளார்.
சர்வதேச விஷயமோ, இந்திய அரசு தொடர்புடைய விஷயங்களிலும் அதிரடியாக கருத்துக்களை சுப்ரமணியசுவாமி தெரிவித்து விடுகிறார்.
செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த சுப்ரமணியசுவாமி, தமிழ்நாட்டில் உள்ள பாதிக்கும் மேற்பட்ட தலைவர்கள் படிப்பறிவு இல்லாதவர்கள் என்று அதிரடியாக கூறி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
இலங்கை விவகாரம் குறித்துப் பேசியபோது இவ்வாறு கூறிய சுப்ரமணிய சுவாமி, இலங்கை குறித்த ஜெயலலிதாவின் தற்போதைய கருத்துகள் கேட்பதற்கு மிகவும் சுவையாக இருக்கின்றன. ஜெயலலிதா தன்னுடைய சுயவுணர்வை இழந்திருக்கலாம் என்று நினைக்கிறேன்.
வெளிநாட்டு விவகாரங்களில் அவர் தலையிடக்கூடாது. அது பற்றி முடிவு எடுக்க வேண்டியது மத்திய அரசின் உரிமை என்றார். அதேபோல் சஞ்சய் தத் விவகாரத்தில் கருத்து கூறிய சுவாமி, பொதுமன்னிப்பு கோரும் விவகாரத்தில் அவர் சுயமாக அவரே கையெழுத்திட்டு மனு போட வேண்டும்; அதை விடுத்து மற்றவர்கள் அவ்வாறு அவரைச் செய்யச் சொல்வது வீண் முயற்சி என்றார் சுவாமி.
சுப்ரமணியசுவாமி சமீபகாலமாக இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக அதிக அளவில் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.
இது தமிழ்நாட்டில் உள்ள தமிழ் உணர்வாளர்களை கடும் கொந்தளிப்பில் ஆழ்த்தி வருகிறது.
இந்த நிலையில் தமிழக அரசியல் தலைவர்களைப் பற்றியும், முதல்வர் ஜெயலலிதா பற்றியும் கூறிய கருத்துக்கள் கடும் புயலைக் கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.