திருவனந்தபுரம் – கேரள மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயதுப் பெண்களும் சென்று வழிபடலாம் என இந்திய உச்சநீதிமன்றம் வழங்கிய வரலாற்றுபூர்வ தீர்ப்பை எதிர்த்து எந்தத் தரப்பும் மேல்முறையீடு செய்யப் போவதில்லை என அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி பெரும்பான்மை நீதிபதிகள் சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் வழிபட அனுமதி உண்டு எனத் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து கேரளாவில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றிருக்கிறது.
இதைத் தொடர்ந்து இந்தத் தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய மாட்டோம் என்று கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் தெரிவித்திருக்கிறார்.
இந்த நிலையில், சபரிமலையை நிர்வகிக்கும் தேவசம் வாரியமும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு எதனையும் சமர்ப்பிக்கப் போவதில்லை என அறிவித்துள்ளது. இதனை தேவசம் வாரியத் தலைவர் ஏ.பத்மகுமார் அறிவித்தார்.
சபரிமலை தீர்ப்பு குறித்த உச்சநீதிமன்றத்தின் வழிமுறைகளைக் கடைப்பிடிக்கவும் செயல்படுத்தவும் ஏற்பாடுகள் செய்து வருகிறோம் எனவும் பத்மகுமார் அறிவித்திருக்கிறார்.
இதற்கிடையில் பல பெண்களும் பெண் அமைப்புகளும் தாங்களாகவே முன்வந்து சபரிமலைக்கு பாரம்பரிய வழக்கப்படி தாங்கள் செல்லப் போவதில்லை என அறிவித்திருக்கின்றனர்.