கோலாலம்பூர் – பிகேஆர் கட்சியின் துணைத் தலைவருக்கான தேர்தலில் பினாங்கு மற்றும் திரெங்கானு மாநிலத்துக்கான வாக்குகள் இறுதியாக்கப்பட்ட பின்னர் அஸ்மின் அலி மீண்டும் மூன்றே வாக்குகள் வித்தியாசத்தில் முன்னணி வகித்து வருகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இருவருக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவுகிறது. பிகேஆர் கட்சியின் அதிகாரபூர்வ தகவல்களின்படி தற்போது அஸ்மின் 19,583 வாக்குகள் பெற்று முன்னணி வகிக்க 19,580 வாக்குகள் பெற்று ரபிசி ரம்லி மூன்றே வாக்குகளில் பின்தங்கியிருக்கிறார்.
நேற்று வெளியிடப்பட்ட தகவல்களின்படி ரபிசி 43 வாக்குகளில் அஸ்மினை முந்தி முன்னணி வகித்தார்.
மிகப் பெரிய மாநிலமான சிலாங்கூர் மாநிலத்தின் வாக்களிப்புதான் இறுதி வெற்றியை நிர்ணயிக்கும் என்ற கருத்துக் கணிப்பும் பிகேஆர் வட்டாரங்களில் நிலவுகிறது. காரணம், மொத்த வாக்குகளில் அதிகமான விழுக்காடு வாக்குகளை சிலாங்கூர் கொண்டிருக்கிறது. அஸ்மின், ரபிசி ஆகிய இருவருமே சிலாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இந்த மாநிலத்தின் வாக்குகளைக் கைப்பற்றுவதில் இருவருக்கிடையிலும் கடும் போட்டி நிலவுகின்றது.