Home வணிகம்/தொழில் நுட்பம் வாழ்க்கையையும் உலகையும் மாற்றிய நிறுவனங்கள் # 6 – டுவிட்டர் -140 எழுத்துகளுக்குள் மனிதனைக் கட்டுப்படுத்தியது

வாழ்க்கையையும் உலகையும் மாற்றிய நிறுவனங்கள் # 6 – டுவிட்டர் -140 எழுத்துகளுக்குள் மனிதனைக் கட்டுப்படுத்தியது

1024
0
SHARE
Ad

சுமார் பத்து அல்லது இருபது ஆண்டுகளுக்கு முன்னால் ஓர் அரசியல் தலைவரோ, பிரபலமோ ஒரு பத்திரிக்கை அறிக்கை விடுகிறார் என வைத்துக் கொள்வோம். அவரது அலுவலகமோ, செயலாளரோ அதனைத் தயாரித்து, மின்னஞ்சல் மூலமாக சம்பந்தப்பட்ட ஊடகங்களுக்கு அனுப்புவார்கள்.

பின்னர் அந்தப் பத்திரிக்கை அந்த அறிக்கையை பிரசுரிக்கும். அதைப் படிக்கும் மக்கள் அதன் பின்னரே தலைவர் என்ன சொன்னார் என்பது குறித்து அறிந்து கொள்வார்கள்.

ஆனால், 2018-ஆம் ஆண்டில்?

#TamilSchoolmychoice

நரேந்திர மோடியோ, மகாதீரோ, டொனால்ட் டிரம்போ, தங்களின் செய்தியை மிகச் சுருக்கமாக 140 எழுத்துகளுக்குள் சுருக்கி டுவிட்டர் எனப்படும் இணைய சமூக ஊடகத்தில் கணினி அல்லது செல்பேசி வழியாக பதிவிடுகிறார்கள். அந்த டுவிட்டர் தளத்தில் அந்தத் தலைவர்களைப் பின்தொடரும் மில்லியன் கணக்கான பொதுமக்கள் மற்றும் உலகம் எங்கும் உள்ள ஊடகங்கள் ஒரே நேரத்தில் அந்த செய்தியைப் பார்க்கிறார்கள். விரிவான அறிக்கையாக இருந்தால் அந்த சுருக்கமான டுவிட்டர் செய்தியுடன் இணைப்பாக இணைக்கப்படுகிறது.

இப்படித்தான், நம்மையும் உலகையும் மாற்றியிருக்கிறது டுவிட்டர் நிறுவனம்!

140 எழுத்துகளுக்குள் டுவிட்டர் பதிவு இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டை நவம்பர் 2017 முதல் இந்நிறுவனம் தளர்த்தியிருக்கிறது. இனி 280 எழுத்துகள் வரை இருக்கலாம் என தளத்தை விரிவாக்கி இருக்கிறார்கள்.

டுவிட் எனப்படும் பறவையின் கீச்சு மொழியை தலைப்பாகக் கொண்டுள்ள இந்த நிறுவனம் 2006-இல் ஜேக் டோசி, நோவா கிளாஸ், பிஸ் ஸ்டோன், இவான் வில்லியம்ஸ் (Jack Dorsey, Noah Glass, Biz Stone & Evan Williams) ஆகியோரின் கூட்டு முயற்சியில் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் உருவாக்கம் கண்டது.

இதன் பணியாளர்களின் எண்ணிக்கையோ 3,500 சொச்சம்தான்! ஆனால் சந்தை மதிப்போ 24 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் மேல்! அதுதான் இன்றைய நவீன தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் தனித்துவம்! குறைந்த பணியாளர்கள் – நிறைந்த வியாபாரம்!

2008-ஆம் ஆண்டில் பராக் ஒபாமா அமெரிக்க அதிபர் தேர்தலில் குதித்தபோது, டுவிட்டர், முகநூல் போன்ற சமூக ஊடகங்களைச் சரியாகவும், முறையாகவும் பயன்படுத்திய காரணத்தால்தான் அவரால் வெற்றியடைய முடிந்தது என்று கூறுமளவுக்கு அப்போது முதல் டுவிட்டர் பிரபலமடையத் தொடங்கியது.

இன்று டுவிட்டரில் பதிந்து கொண்டு வலம் வராத தலைவர்களோ பிரபலங்களோ இல்லை எனலாம். அப்படி ஒருவர் இருந்தால் அவர் அத்தனை பிரபலம் இல்லை என்று அர்த்தம்!

இன்று டுவிட்டரில் வலம் வருவதன் மூலம், உலகின் அனைத்து ஊடகங்களின் செய்திகளையும், நீங்கள் அதிகாரபூர்வமாகத் தெரிந்து கொள்ளலாம். எந்தத் தலைவர் இப்போது எங்கிருக்கிறார், என்ன செய்து கொண்டிருக்கிறார், என்ன சொல்கிறார் என்பதைத் தெரிந்து கொள்ள டுவிட்டரைத் தட்டினால் போதும்!

செய்திகள் மட்டுமின்றி, புகைப்படங்கள், காணொளிகள் என அனைத்தும் பதிவேற்றம் செய்யப்படும் தளமாக இன்றைக்கு டுவிட்டர் வளர்ந்து உலகின் போக்கையே மாற்றியமைத்த நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.

-இரா.முத்தரசன்

தொடர்புடைய முந்தைய கட்டுரைகள்:

வாழ்க்கையையும் உலகையும் மாற்றிய 10 நிறுவனங்கள் # 1 ஆப்பிள்

வாழ்க்கையையும் உலகையும் மாற்றிய 10 நிறுவனங்கள் # 2 அமேசோன்

வாழ்க்கையையும் உலகையும் மாற்றிய நிறுவனங்கள் # 3 பேஸ்புக்

வாழ்க்கையையும் உலகையும் மாற்றிய நிறுவனங்கள் # 4 ‘அல்பாபெட்’

வாழ்க்கையையும் உலகையும் மாற்றிய நிறுவனங்கள் # 5 – மைக்ரோசோஃப்ட்