புத்ரா ஜெயா – டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் இன்று புதன்கிழமை காலை மீண்டும் புத்ரா ஜெயாவிலுள்ள ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு வாக்குமூலம் வழங்குவதற்காக வருகை தந்தார். சரவாக் மாநிலத்திலுள்ள பள்ளிகளுக்காக சூரிய சக்தியிலான மின் ஆற்றல் உற்பத்தித் தகடுகளைப் பொருத்துவது தொடர்பில் நிகழ்ந்த நிதி முறைகேடுகள் மீது அவர் விசாரிக்கப்பட்டார் என நம்பப்படுகிறது.
ஊழல் தடுப்பு ஆணையத்தின் பின்புற வாசல் வழியாக நஜிப்பின் வாகனம் காலை 9.40 மணியளவில் நுழைந்தது.
அங்கு செல்வதற்கு முன்பாக, அவரது மனைவி ரோஸ்மா மன்சோர் மீதான வழக்கின் விசாரணையைக் கண்காணிக்க நஜிப் கோலாலம்பூர் அமர்வு நீதிமன்றத்திற்கு (செஷன்ஸ்) மனைவியுடன் வந்திருந்தார்.
சரவாக் மாநிலத்திலுள்ள பள்ளிகளுக்காக சூரிய சக்தியிலான மின் ஆற்றல் உற்பத்தித் தகடுகளைப் பொருத்துவது தொடர்பான விசாரணைக்கு கடந்த அக்டோபரில் கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ மாட்சிர் காலிட் அழைக்கப்பட்டு, சுமார் 5 மணி நேரம் ஊழல் தடுப்பு ஆணையத்தில் விசாரிக்கப்பட்டார்.
அதற்கு முன்னதாக, ஜூலை 9-ஆம் தேதி நஜிப்பின் சிறப்பு அதிகாரி ஒருவர் இதே வழக்கு விசாரணை தொடர்பில் 6 நாட்களுக்கு ஊழல் தடுப்பு ஆணையத்தால் தடுத்து வைக்கப்பட்டார்.