Home உலகம் பதவி இழந்த ராஜபக்சே – ஏற்க மறுக்கும் ஆதரவாளர்கள்!

பதவி இழந்த ராஜபக்சே – ஏற்க மறுக்கும் ஆதரவாளர்கள்!

986
0
SHARE
Ad

இலங்கை – இன்று புதன்கிழமை காலை கூடிய இலங்கை நாடாளுமன்றம் புதிய பிரதமராக நியமிக்கப்பட்ட ராஜபக்சே மற்றும் அவரது அமைச்சரவைக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்றை வெற்றிகரமாக நிறைவேற்றியது.

இதன் மூலம் இலங்கையில் ஜனநாயகம் நிலை நாட்டப்பட்டிருப்பதோடு, அதிபர் மைத்திரிபால சிறிசேனாவின் அதிபர் பதவியும் ஆட்டம் காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாடாளுமன்றப் பெரும்பான்மையை ரணில் விக்கிரமசிங்கே பெற்றாலும் அவரை நான் பிரதமராக ஏற்க மாட்டேன் என சிறிசேனா சவால் விடுத்திருந்தார்.

#TamilSchoolmychoice

இந்நிலையில் இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது செல்லாது என அதிரடியாக இலங்கை உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. இன்று ராஜபக்சேவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானமும் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டிருப்பதைத் தொடர்ந்து அடுத்து சிறிசேனா என்ன செய்யப் போகிறார் என்ற பரபரப்பு இலங்கையில் ஏற்பட்டிருக்கிறது.

இன்று நாடாளுமன்றம் கூடியபோது கூச்சலும் குழப்பமும் நிலவியதாக பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர். ராஜபக்சே ஆதரவாளர்கள் வாக்கெடுப்பைத் தடுக்க முற்பட்டனர்.

எனினும் குரல்வழி வாக்கெடுப்பு நடத்தப் போவதாக அறிவித்த நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூர்யா, அத்தகைய வாக்கெடுப்புக்குப் பின் ராஜபக்சே தலைமையிலான அரசாங்கம் பெரும்பான்மையை இழந்து விட்டதாக அறிவித்தார்.

ராஜபக்சேயின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நமல் ராஜபக்சே இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைத் தாங்கள் ஏற்கப் போவதில்லை என்றும் வாக்கெடுப்பு முறையாக நடத்தப்படவில்லை என்றும் கூறியிருக்கிறார்.

எனினும் பிரதமராகப் பதவி வீழ்த்தப்பட்ட ரணில் விக்கிரமசிங்கே, 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர் எனத் தெரிவித்திருக்கிறார்.