
கிள்ளான் – தமிழ்ப்பள்ளி மாணவர்கள் தங்கள் பள்ளியில் தாங்கள் பெற்ற திறன்களையெல்லாம் தங்கள் பெற்றோர்முன் மகிழ்ச்சியோடு வெளிப்படுத்தும் விழா, ‘நேர்த்திநிறைநாள்’ விழாவாகும். முன்பெல்லாம் இது ‘பெற்றோர்தின விழா’, ‘பரிசளிப்பு விழா’ என்ற பெயர்களில் நடந்து வந்தது. இப்பொழுது பரவலாக ‘நேர்த்தி நிறைநாள்’, ‘மாணவர் தன்னாற்றல் விழா’ என்னும் பெயர்களில் நடந்து வருகிறது. இது மலாயில் ‘Hari Anugerah Kecemerlangan’ என்று வழங்கப்படுவதன் தமிழாக்கம்.
இவ்வாண்டு சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியில் ‘நேர்த்தி நிறைநாள்’ விழா கடந்த சனிக்கிழமை நவம்பர் 17-ஆம் தேதி இரவு பள்ளி மண்டபத்தில் சிறப்புற நடந்தேறியது.
திரு. சந்திரன் இரத்தினம் அவர்கள் பள்ளிக்குத் தலைமையாசிரியராய்ப் பொறுப்பேற்றபின் நடக்கும் இரண்டாம் நேர்த்திநிறைநாள் விழா இதுவாகும். விழாவுக்கு அவர் தலைமையாசிரியர் என்னும் முறையில் தலைமையேற்றார். திரு. இரா. வெங்கடேஸ்வர ராவ் அவர்கள் விழாவைத் தொடக்கி வைத்தார். பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் திரு. இசைச் செல்வன், பள்ளியின் வாரியத் தலைவர் ஓம்ஸ் திரு பா. தியாகராஜன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பெரிய அரங்கம் நிரம்பி வழியும் வண்ணம் பெற்றோர் திரளாக வருகை புரிந்திருந்தனர்.
விழாவின் முதல் கலைப்படைப்பாக ‘நான்கு கோடி’ என்னும் இலக்கிய நாடகம் நடந்தது. இது சராசரி இலக்கிய நாடகமன்று; முழுக்க முழுக்கக் கவிதையால் அமைந்த நாடகமாகும். பாப்பாவின் பாவலர் முனைவர் முரசு நெடுமாறன், பிற்கால ஔவையாரின் தனிப்பாடல் ஒன்றனைக் கருவாகக் கொண்டு சிறுவர்களுக்காக இயற்றிய நாடகம் இது. இது ஒரு சவால் மிக்க படைப்பாகும்.
ஆம்! நீண்ட காலமாக இங்கும் எங்கும், மொழியின் முதன்மைக் கூறான கவிதைக்கு முதன்மை தரப்படுவதில்லை; கற்றல் கற்பித்தலிலும் அதற்கு உரிய இடம் வழங்கப் பெறுவதில்லை. அதனால் தொடக்கப் பள்ளிமுதல் பல்கலைக்கழகம் வரை பயிலும் மாணவர்களில் உணர்வு நலத்துடனும் உச்சரிப்பு வளத்துடனும் கவிதையை வாசிப்பவரைக் காண்பது அரிதாகவே உள்ளது. நீண்ட நெடுங்காலமாக வானொலி, தொலைக்காட்சிகளிலும் கவிதை நாடகம் இடம் பெறுவதில்லை.
இங்குக் கடைசியாகப் பாரதியாரின் நூற்றாண்டு விழாவின்போது அவரின் ‘பாஞ்சாலி சபதம்’ குறுங்காவியம், கவிச்சுடர் காரைக்கிழாரால் நாடக வடிவம் பெற்று, அரசியல் சமுதாயப் பெருந்தலைவர்கள், மதிப்புமிகு பெருமக்கள் நிரம்பியிருந்த தேவான் பாகாசா டான் புஸ்தாகா மண்டபத்தில் அரங்கேறியதே கடைசிக் கவிதை நாடகமாகும் (1982 பிப்பிரவரி 28). அதனை இயக்கியவர் கலைஞர் பி. கே. சாமி.
இன்றைய சூழலில் தலைமையாசிரியர் திரு. சந்திரன் இரத்தினம், துணிச்சலோடு ‘நான்கு கோடி’ கவிதை நாடகத்தைத் தம் பள்ளி மாணவர்களைக் கொண்டு நடத்த முன்வந்தார். அவர் எண்ணம் வெற்றிபெறும் வகையில் அந் நாடக உருவாக்கத்திற்குத் தலைமைப் பொறுப்பேற்ற ஆசிரியர் செல்வி பூரணி வரதராசுடன் ஆசிரியர்கள் திரு. அ. நரேந்திரன், திருமதி. ப. நிர்மலாதேவி ஆகியோரோடு ஆசிரியர் பலரின் கடுமையான உழைப்பு நாடகத்திற்கு வெற்றியை நல்கியது.
இதன் ஆக்கத்திற்கும் அரங்கேற்றத்திற்கும் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் திரு இசைச் செல்வனும், செயலவையினரும் பேராதரவு நல்கினர்; மாணவர்களைப் பலவகைகளில் ஊக்கப்படுத்தினர். இந்த நாடகம் முதலில் முனைவர் முரசு நெடுமாறன் தலைமையில் மலாயாப் பல்கலைக்கழகத்தில் நடந்த முதலாம் உலகத் தமிழ்க் குழந்தை இலக்கிய மாநாட்டில் அரங்கேறி, உலகப் பேராளர்களின் ஒருமித்த பாராட்டுதல்களைப் பெற்றது.
கவிதை நாடகம் நடத்த வேண்டுமென்ற சவாலை ஏற்ற சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியின் முயற்சிக்குப் புறச்சூழல்களும் பெருந்துணை புரிந்தன. நாடகத்தை இயக்க வழிகாட்டித் துணை புரிந்ததோடு, ஒப்பனைப் பொறுப்பையும் ஏற்ற பழம்பெரும் கலைஞர் நாடகமணி மு. சு. மணியம், பாடல்களுக்கு இசையமைத்த இசை முரசு மு. நெ. இளவரசு, இனிய குரலால் பாடலுக்கு உயிர் கொடுத்த இசையாசிரியர் மு.நெ. அல்லிமலர் மனோகரன், பின்னணி இசை வழங்கிய திரு. மோசஸ் ஆகியோரின் ஒத்துழைப்பு நாடகத்தை ஓர் உயர்ந்த கலைப்படைப்பாக ஆக்கிற்று.
சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளி மாணவர்களில் நாடகத்தில் நடித்த 14 பேருடன் அருள் நுண்கலைப்பள்ளி வாயிலாக இசைப் பயிற்சி பெற்றுவரும் ஐந்து மாணவர்கள் பன்னாட்டுக் கவிஞர்களின் பல சிறுவர் பாடல்களை உயர்தரம் வாய்ந்த பின்னணி இசையுடன் சிறப்பாகப்பாடி மாநாட்டிற்குப் புகழ் சேர்த்தனர்.
இந்நாடகம் இரண்டாம் முறையாக அதே அமைப்பில் பள்ளியின் நேர்த்திநிறைநாள் விழாவில் மேடை ஏறியது. இங்கே, அதனில் பங்கேற்ற மாணவர்களின் திறன் பற்றிச் சொல்லியே ஆக வேண்டும். அரசன் முதல் காவலாளிவரை பாத்திரமேற்ற அனைத்து மாணவர்களும் அப் பாத்திரங்களாகவே மாறினர் என்பது மிகையன்று. தோற்றத்தாலும் நடையாலும் உயிர்ப்போடு கம்பீரமாகக் கவிதைகளை வழங்கிய பாங்காலும் செல்வன் தனேஸ் அன்பழகன் தனித்த சிறப்புப் பெற்றான்.
மேடையில் ஔவையாரே நேரில் வந்து பாடியதுபோல், ஒவ்வொரு கோடி பாடலையும் இயல்பாகப் பாடி (வாயசைத்து) நடித்த செல்வி லோசினி சேகர் அனைவரையும் தம்பால் ஈர்த்துப் பாத்திரத்திற்கு உயிர் தந்தாள். புலவர்களாக நடித்த கீர்த்தனா அன்பழகன், நம்பிஆருரன் தியாகு, திருமந்திரன் குமரன், அவனேஷ்குமார் குமரேசன் ஆகியோர் நடிப்பாலும் கவிதைகளை உணர்ச்சி நயத்துடன் வெளிப்படுத்திய திறத்தாலும் பழங்காலப் புலவர்களே மேடைக்கு வந்துவிட்டது போன்ற சூழலை ஏற்படுத்தி பாராட்டுப் பெற்றனர். ஆசிரியர்களின் திறனும் உழைப்பும் நன்கு வெளிப்பட்டன. மலேசியத் தமிழ்ப்பள்ளி வரலாற்றில் இது ஒரு சாதனைமிக்க படைப்பு எனலாம்.

கவிதை நாடகத்தோடு, பள்ளி விழாவில் நடந்த கலைப் படைப்புகள் அனைத்தும் பாராட்டும்படி அமைந்து கண்டோரைக் களிப்பில் ஆழ்த்தின. தமிழ்ப்பள்ளி மாணவர்கள் தேசிய மொழிப்படைப்புகளை வழங்குவதிலும் வல்லவர்கள் என்பதனை அரங்கில் நடந்த படைப்புகள் மெய்ப்பித்தன.
இரண்டாம், மூன்றாம் ஆண்டு மாணவர்கள் (ஆண், பெண்) வழங்கிய படைப்பு உயிர்ப்போடு அமைந்தது. கோலாட்டத்துடன் கூடிய-கிராமிய வடிவில் அமைந்த இப் படைப்பு, அருமையான ஆக்கமாக அரங்கேறியது. குழந்தை நடனப் படைப்புக்குரிய கட்டொழுங்கு, நளினம், கலகலப்புக் குறையாமல் தங்கள்படைப்பை மாணவர்கள் அழகுற வழங்கினர்.

விழாவில் மாணவர்களின் பாடும் திறனும் வெளிப்பட்டது. பல நல்ல திரைப் பாடல்களைத் தொகுத்துத் தொடர்ச்சியாக நயம் குன்றாமல் மாணவர் சிலர் பாடி மகிழ்வித்தனர்.
அடுத்து நடனம் வழங்கிய ஆறாம் ஆண்டு மாணவர்கள், திரைப்பாடல் ஒன்றனைப் பின்னணியாகக் கொண்டு, மயிலாட்டத்துடன் கூடிய கிராமியப் படைப்பு ஒன்றனைத் தந்தனர். தொடர்ந்து தனிப்பாடலாக திரைப்படப் பாடல் ஒன்றும் இடம் பெற்றது.
இங்ஙனம் இடம்பெற்ற கலைப் படைப்புகளோடு, நூற்றுக் கணக்கான மாணவர்களுக்குப் பரிசுகளும் விருதுகளும் வழங்கப் பெற்றன. ஒவ்வொரு வகுப்பிலும் சிறந்த தேர்ச்சிபெற்ற மாணவர்களுக்குப் பரிசும் பாராட்டும் வழங்கப் பெற்றன.
இவ்வாண்டில் சிறந்த மாணவர்களுக்குப் பரிசும் பாராட்டும் அளித்தமைபோல், கடந்த ஆண்டு பள்ளியில் சாதனை புரிந்த மாணவர்களும் சிறப்புச் செய்யப் பெற்றனர். கடந்த ஆண்டு அடைவு நிலைத் தேர்வில் சிறப்புத் தேர்ச்சிபெற்ற இருபது மாணவர்களுக்குப் பாராட்டும் பரிசும் வழங்கப் பெற்றன. தொடர்ந்து கடந்த ஆண்டு அனைத்து நிலைகளிலும் பாராட்டத்தக்க திறன்பெற்ற செல்வன் அபிஷேக் பரந்தாமனுக்குப் பள்ளியின் ‘ஒட்டுமொத்த நேர்த்திநிறை மாணவர்’ விருது வழங்கப் பெற்றது. அம்மாணவனின் பெற்றோரும் பெருமைபடுத்தப் பெற்றனர்.
விருது பெற்ற மாணவன் அபிஷேக் பரந்தாமன் தன் வெற்றிக்கு அமைந்த பின்னணிகளையும் தன் அனுபவங்களையும் சுவைபட எடுத்துரைத்தான். அது மாணவர்களுக்கு நல்ல படிப்பினையாய் அமைந்தது.
மாணவனின் அன்னை (இப் பள்ளியின் முன்னாள் ஆசிரியரும் தலைமையாசிரியராய்ப் பணியாற்றி ஓய்வு பெற்றவருமான திரு. கருப்பண்ணன் மகள்) திருமதி. யசோதா, பிள்ளைகளின் வளர்ச்சிக்குப் பெற்றோர் ஆற்ற வேண்டிய கடமைகளை எடுத்துரைத்தார். ஆசிரியரான அவர் உரை, பயனுடைய அனுபவ மொழியாக அமைந்தது. இவைபோன்ற வாய்ப்பும் பாரம்பரியப் பண்பாட்டுத் திறனும் தமிழ்ப்பள்ளிகளில் பயில்வோர்க்கே கிட்டும் என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது. வேறு எங்குப் பயின்றாலும் – பன்னாட்டுப் (International) பள்ளியில் கற்றாலும் இங்ஙனம் தனித்திறனை, பண்பாட்டுணர்வை வெளிப்படுத்த வாய்ப்பில்லை.
பெரும் கோலாகலமாக நடைபெற்ற பள்ளியின் ‘நேர்த்திநிறை விழா’, தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாத அய்யருக்குப் படையலாக்கப் பெற்றது. உ.வே.சா. தமிழ்த் தொண்டைக் கணினித்திரைப் பின்னணி மூலம் சிறப்பாக எடுத்துரைத்தனர்.
ஆசிரியர்கள் பெருமுயற்சி செய்து மண்டபத்தை ஒரு கலையரங்குபோல மாற்றினர் எனினும் எதிரொலியைக் கட்டுப்படுத்த இயலவில்லை என்பது ஒன்றே சிறிய குறையாகும்.
‘நேர்த்திநிறைநாள்’ விழாவை நேர்த்தியோடு நடத்திய சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளி, பல வரலாற்றுப் பின்னணிகளைக் கொண்ட பள்ளி என்பது இங்குக் குறிப்பிடத்தக்கதாகும்.