Home நாடு “சீபீல்ட் விவகாரத்தில் மோகன் ஷான் குழப்பக் கூடாது” – வேதமூர்த்தி வேண்டுகோள்

“சீபீல்ட் விவகாரத்தில் மோகன் ஷான் குழப்பக் கூடாது” – வேதமூர்த்தி வேண்டுகோள்

1044
0
SHARE
Ad

புத்ரா ஜெயா – சீ பீல்ட் மகா மாரியம்மன் ஆலய விவகாரத்தில் மலேசிய இந்து சங்கம் தலையிடாமல் இருக்க வேண்டும் என்றும் அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் டோமி தோமஸ் தனது கடமைகளை முறையே செய்து முடிக்க கால அவகாசமும், வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

சீபீல்ட் ஆலய விவகாரம் குறித்து கருத்துரைத்திருந்த மலேசிய இந்து சங்க தேசியத் தலைவர் டத்தோ மோகன் ஷான், அரசாங்கத் தலைமை வழக்கறிஞரின் தலையீட்டை வரவேற்பதாகவும், ஆனால் சிலாங்கூர் அரசாங்கம் வழங்கியிருக்கும் 0.4 ஹெக்டர் நிலத்தைத் திரும்ப எடுத்துக் கொள்வது என்பது நியாயமில்லை என்றும் கூறியிருந்தார். அவரது கருத்துகளை கடந்த டிசம்பர் 16-ஆம் தேதி நியூ ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் இணைய ஊடகம் வெளியிட்டிருந்தது.

அந்தச் செய்தியை மேற்கோள் காட்டி வெளியிட்ட அறிக்கை ஒன்றில் வேதமூர்த்தி மேற்கண்டவாறு தெரிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

“மோகன் ஷானின் (படம்) பேச்சு இந்த நேரத்தில் தேவையற்றது என்பதோடு, ஏற்கனவே தீர்க்கப்பட்டுவிட்ட ஒரு பிரச்சனையை மீண்டும் தூபம் போட்டு கிளறி விடுவதற்கு ஒப்பாகும். அதே வேளையில் அரசாங்கத் தலைமை வழக்கறிஞரின் பணிகளுக்கு இடையூறு செய்வதாகவும் மோகன் ஷானின் பேச்சு அமைந்திருக்கிறது” என்றும் வேதமூர்த்தி தனது அறிக்கையில் தெரிவித்தார்.

அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் அண்மையில் கூட்டியிருந்த கூட்டத்தில் கலந்து கொண்ட சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் ஒருமனதாக ஒரு தீர்வுக்கு நெருங்கியுள்ளனர் என்று கூறிய வேதமூர்த்தி, சட்டத்தின்படி தலைமை வழக்கறிஞருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி பொதுமக்களின் நலனை முன்நிறுத்தி அவர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவருக்கு ஊக்கமும் ஆதரவும் தரப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

“சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்புகளும் ஒன்றுகூடி அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் அலுவலகம் முன்மொழிந்துள்ள தீர்வுகளைக் கொள்கை அளவில் ஏற்றுக் கொண்டு இந்த விவகாரத்தை முன்னெடுத்துச் செல்ல தீர்மானிக்கப்பட்டிருக்கும் இந்த நல்ல சூழ்நிலையில், முழு விவரங்களையும் தெரிந்து கொள்ளாமல், குழப்பம் ஏற்படுத்தும், திரிக்கப்பட்ட அறிக்கைகளை விடுப்பதையும், பொதுமக்களிடையே தவறான கண்ணடோட்டத்தை ஏற்படுத்தும் கருத்துகளைத் தெரிவிப்பதையும், மலேசிய இந்து சங்கத்தின் தலைவர் என்ற முறையில் மோகன் ஷான் தவிர்க்க வேண்டும்” எனவும் வேதமூர்த்தி கேட்டுக் கொண்டார்.

அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் முன்மொழிந்துள்ள தீர்வுகளின் அடிப்படையில் இந்த விவகாரத்தை முன்னெடுத்துச் செல்ல அனைத்துத் தரப்புகளும் அரசாங்கத் தலைமை வழக்கறிஞருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் வேதமூர்த்தி அறைகூவல் விடுத்துள்ளார்.