Home நாடு “புதிய மலேசியாவில் காலடி வைப்போம்” சேவியர் ஜெயக்குமார்

“புதிய மலேசியாவில் காலடி வைப்போம்” சேவியர் ஜெயக்குமார்

1637
0
SHARE
Ad

புத்ரா ஜெயா – அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கும் பிகேஆர் கட்சியின் தேசிய உதவித் தலைவரும், கோலலங்காட் நாடாளுமன்ற உறுப்பினரும், நீர், நிலம் இயற்கை வள அமைச்சருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார் “மலேசிய மக்கள் நல்ல அரசியல் முதிர்ச்சி கொண்டவர்கள், எதிலும் மிக ஆழ்ந்த சிந்தனைக்குப் பின் சிறந்த முடிவுகளை எடுப்பதில் வல்லவர்கள் என்பதனை நிரூபித்து விட்டார்கள். கடந்த 10 ஆண்டுகளாகச் சில மாநிலங்களில், மக்களால் ஏற்படுத்தப் பட்டுள்ள இரண்டு கட்சி ஆட்சிமுறையின் வெற்றிகளைக் கவனித்து, 2018 ம்ஆண்டில் 14 வது பொதுத் தேர்தலின் வழி ஆரவாரமின்றி நாட்டில் ஆட்சி மாற்றம் செய்துள்ளனர்” என தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

“ஒரு பல இன நாட்டில், ஒரே தலைவர், ஒரே இன அல்லது ஒரே கட்சியின் குறுகிய அரசியல் வாழ்வுக்காக மட்டும் கொள்கைகள் வகுக்கக் கூடாது. உலகமயப் பொருளாதார யுகத்தில் வாழும் நாம், அடுத்த தலைமுறையினர் தலை நிமிர்ந்து நிற்கவும், அவர்களின் சுகமான வாழ்வுக்குத் திட்டமிடும் பரந்த மனமுடைய பொறுப்பான அரசைக் கொண்டிருக்க வேண்டிய அவசியத்தினை மக்கள் உணர்ந்து விட்டனர். புத்தாண்டு மகிழ்ச்சியை மலேசிய மக்களுடன் பகிர்ந்து கொள்ளும் இவ்வேளையில், பொறுப்பற்ற நிர்வாக முறை, சுரண்டல், ஊழலால் நாட்டில் விலைவாசிகள் கட்டுக்கடங்காமல் ஏறிவிட்டதைத் தடுப்பதுடன், இன்றைய சவால்கள் என்ன, மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன என்பதைப் புதிய அரசாங்கம் நன்கு உணர்ந்துள்ளது. குறிப்பாக ஏழைகள் மற்றும் நடுத்தர வருமானமுடைய மக்கள் கடுமையான பொருளாதாரச் சிக்கல்களை எதிர் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருப்பதைக் கவனத்தில் கொண்டு சில நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன” எனவும் சேவியர் தனது புத்தாண்டுச் செய்தியில் தெரிவித்தார்.

“இப் புதிய ஆண்டில் புதிய மலேசியாவை உருவாக்கும் முயற்சியில், அரசுடன் மக்களும் இணைந்து ஊழல், ஊதாரித்தனம், சுரண்டல், பிரித்தாளும் கலாச்சாரம் போன்றவைகளை அடியோடு ஒழிக்கப் போராடுவோம். மேம்பாட்டுக்கான நமது முயற்சியை இரட்டிப்பாக்கவோம், புத்ரா ஜெயாவில் அரசியல் மாற்றம் மட்டுமல்ல நமது குறிக்கோள், மக்கள் சுகமான வாழ்வுக்கு நிர்வாகம், உற்பத்தி, கல்வி, தொழில்நுட்பம் என்று அனைத்திலும் புதிய சிந்தனைகளைப் புகுத்திப் புதிய மலேசியாவில் இணைந்து காலடி எடுத்து வைப்பதே நமது நோக்கம். வாருங்கள் அனைவரும் ஒன்றிணைந்து நமது அடுத்த கட்டச் செயலை முன்னெடுப்போம், என்று அழைப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்” எனவும் ஊடகங்களுக்கு அனுப்பிய தனது புத்தாண்டு செய்தியில் சேவியர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.