புத்ராஜெயா: அமைச்சரகத்தில் உள்ள எல்லா விதமான பணம் சம்பந்தப்பட்ட விண்ணப்பங்களும், இனி இணையச் சேவையைப் பயன்படுத்துமாறு மனிதவள அமைச்சு பரிந்துரைத்துள்ளது.
முக்கியமாக வெளிநாட்டு தொழிலாளர்களை பணியமர்த்துவதற்கு விண்ணப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் இனி இணையம் மூலம் செயல்படுத்தபடும் என மனிதவள அமைச்சர் எம்.குலசேகரன் தெரிவித்தார்.
“இணையம் வழியாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் பொழுது, சம்பந்தப்பட்டவர்கள் யாரையும் சந்திக்கவோ, அல்லது அணுகவோ தேவைப்படாது. இவ்வாறான சூழலில் ஊழலை தவிர்ப்பதற்கு சாத்தியம் உண்டு” என அவர் விளக்கினார்.
அமைச்சக அதிகாரிகள் ஒவ்வொரு பணிகளையும் பொறுப்புணர்ச்சியுடன் செயல்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார். விண்ணப்பங்கள் ஒப்புதல் வழங்கப்பட்டாமல் மறுக்கப்பட்டால் அதற்கான விளக்கங்கள் உடனடியாக கொடுக்கப்பட வேண்டும் என அமைச்சர் தெரிவித்தார். 48 மணி நேரத்திற்குள் அனைத்து தகவல்களும், மின்னஞ்சல்களும், விண்ணப்பங்களும் பதிலளிக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.