ஜோர்ஜ் டவுன்: பிரதமர் மகாதீர் பதவி விலகி, உடனடியாக பி.கே.ஆர் கட்சித் தலைவர் அன்வார் இம்ராகிம் பிரதமர் பதவியை ஏற்றாக வேண்டும் என பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் குமரேசன் ஆறுமுகம் தெரிவித்தார். கடந்த இடைத் தேர்தல்களில் ஏற்பட்ட தோல்விகளின் அடிப்படையில் தாம் அவ்வாறு குறிப்பிடுவதாக அவர் தெரிவித்தார்.
ஆளும் கூட்டணியின் மீது மக்களுக்கு ஏற்பட்ட அவநம்பிக்கையிலிருந்து வெளிப்பட, இந்த முடிவு எடுக்க வேண்டி சூழலுக்கு நம்பிக்கைக் கூட்டணி தள்ளப்பட்டு விட்டதாக அவர் கூறினார்.
“தற்போதைய சூழலில், அன்வார் சிறந்த முறையில் திட்டங்களைத் தீட்டி, உயரும் செலவினத்தை சமாளித்து, நல்லதொரு தீர்வுகளைக் கொண்டுவருவதில் புதிய சூத்திரத்தை அறிமுகப்படுத்த முடியும்” என குமரேசன் தெரிவித்தார்.
14 வது பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிப் பெற்ற, 10 மாதங்களுக்குள், நம்பிக்கைக் கூட்டணி கேமரன் மலை மற்றும் செமினி இடைத் தேர்தலில் தோல்வியுற்றது.
கடந்த பொதுத் தேர்தலின் போது நம்பிக்கைக் கூட்டணி அரசு வெளியிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் இந்த தோல்விகள் ஏற்பட்டதாக குமரேசன் கூறினார்.