கோலாலம்பூர்: சமீபத்தில் அடையாள ஆவணப் பிரச்சனைக் குறித்து பல கேள்விகளும், சர்ச்சைகளும் எழுப்பப்பட்டு வந்த வேளையில், அந்த விவகாரம் கூடிய விரைவில் தீர்க்கப்படும் என பிரதமர் துறை அமைச்சர் பொன். வேதமூர்த்தி கூறினார்.
இந்த விவகாரத்தில் முக்கியக் காரணிகளைக் கண்டறிந்து கூடிய விரைவில் இந்த பிரச்சனையை தீர்க்க உள்ளதாக அவர் குறிப்பிட்டார். மலேசியாவில், தீபகற்ப மாநிலங்களில் மட்டுமல்லாமல், சபா மற்றும் சரவாக்கிலும் இந்த விவகாரம் பரவியிருப்பதை அவர் சுட்டிக் காட்டினார்.
கூடிய விரைவில் அமைச்சரவையில் இந்த விவகாரம் குறித்து பரிந்துரைக்கப்பட்டு தீர்வுக் காணப்படும் என அவர் அறிக்கை ஒன்றின் வாயிலாகத் தெரிவித்தார். இந்த பிரச்சனையை தீர்ப்பதற்கு பல்வேறு சட்டப் பிரச்சனைகளும், சட்டத்தில் பல்வேறு கூறுகளை பரிசீலித்துப் பார்க்க வேண்டிய நிலையும் அடங்கியிருக்கிறது என அவர் தெரிவித்தார்.
அண்மையில், மஇகா உதவித் தலைவர் சி.சிவராஜும், சிவசுப்பிரமணியமும் குறிப்பிட்டிருந்ததற்கு பதில் கூறும் வகையில் அவர் இந்த அறிக்கையை வெளியிட்டிருந்தார். 60 ஆண்டுகளில் மஇகா நினைத்திருந்தால் இந்த பிரச்சனை தீர்த்திருக்கலாம் என்றும், தற்போது நம்பிக்கைக் கூட்டணி மீது பாய்வது சரியான நடவடிக்கையாக இருக்க முடியாது எனவும் அவர் நினைவுப்படுத்தினார்.