பாசிர் கூடாங் – சுங்கை கிம் கிம் ஆற்றில் கொட்டப்பட்ட இராசயன நச்சுக் கழிவுகளினால் பரவியுள்ள காற்றின் தூய்மைக் கேட்டினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று வியாழக்கிழமை வரை 2,775 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று வியாழக்கிழமை (மார்ச் 14) நண்பகல் 12.00 மணிவரை பாசிர் கூடாங்கில் உள்ள இரண்டு மருத்துவ முகாம்களில் 1,906 பேர் சிகிச்சை பெற்றிருக்கின்றனர். மேலும் பாதிக்கப்பட்ட 869 பேர் ஜோகூர் பாருவில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றிருக்கின்றனர்.
ஜோகூர் மாநில அரசாங்கத்தின் சுகாதாரம், சுற்றுச் சூழல் மற்றும் விவசாய துறைக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் டாக்டர் ஷாருடின் ஜமால் இந்த விவரங்களை வெளியிட்டார்.
இந்த நச்சுக் கழிவு பாதிப்பினால் பல பள்ளிகளையும் கல்வி அமைச்சு காலவரையின்றி மூடுவதாக அறிவித்திருக்கிறது.
இதற்கிடையில் நேற்று ஜோகூர்பாருவுக்கு வருகை தந்த பிரதமர் துன் மகாதீர், துணைப் பிரதமர் வான் அசிசா ஆகியோர் நச்சுக் கழிவுகளினால் பாதிக்கப்பட்டு ஜோகூர்பாரு சுல்தான் இஸ்மாயில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களைச் சந்தித்தனர்.
அவர்களுடன் ஜோகூர் மந்திரி பெசார் ஒஸ்மான் சப்பியானும் வருகை தந்தார்.