ரந்தாவ்: வருகிற சனிக்கிழமை (ஏப்ரல் 13) நடக்கவிருக்கும் ரந்தாவ் சட்டமன்ற இடைத் தேர்தலில் சுமார் 1,100 காவல் அதிகாரிகள் பணியில் அமர்த்தப்படுவர் என ரந்தாவ் இடைத் தேர்தலுக்கான காவல் துறை செய்தி தொடர்பாளர் டிஎஸ்பி அகமட் ஜமாலுடின் தெரிவித்தார்.
ரந்தாவ் சட்டமன்ற இடைத் தேர்தலில் இதுவரையிலும், 73 புகார்கள் அளிக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 15 புகார்கள் மீது விசாரணை தொடங்கப்பட்டு விட்டதாகவும் அவர் தெரிவித்தார். இதனிடையே, அண்மையில், இன ரீதியிலான பதாகை ஒன்று பகிரப்பட்டது தொடர்பாக எந்தவொரு கைது நடவடிக்கையும் செய்யப்படவில்லை என அவர் கூறினார். அந்த விவகாரம் குறித்து காவல் துறை சாட்சிகளிடம் விசாரித்து வருவதாகவும் அகமட் தெரிவித்தார்.
இன்று செவ்வாய்க்கிழமை தொடங்கிய, ரந்தாவ் சட்டமன்ற இடைத் தேர்தலின் முன்கூட்டியே வாக்களிப்பு மதியம் 12 மணிக்கு மூடப்பட்டது. இந்த முன்கூட்டியே வாக்களிப்பில் 110 இராணுவர்களும், காவல் துறையினரும் வாக்களிக்க தகுதிப் பெற்றிருந்தனர்.
இம்முறை, தேசிய முன்னணி சார்பில் அம்னோ துணைத் தலைவர் முகமட் ஹசான் போட்டியிட, அவரை எதிர்த்து நம்பிக்கைக் கூட்டணி சார்பில் பிகேஆர் கட்சியின் டாக்டர் எஸ்.ஸ்ரீராம் களமிறங்குகிறார். இவர்களைத் தவிர ஆர்.மலர் என்ற இந்தியப் பெண்மணியும், முகமட் நோர் ஹசான் என்பவரும் சுயேச்சையாகப் போட்டியிடுகின்றனர்.