மாஸ்கோ – அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் இரண்டு உச்சநிலைச் சந்திப்புகள் நடத்திய வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன், இரஷியாவுக்கு வருகை மேற்கொண்டு அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடினைச் சந்தித்திருப்பதன் மூலம் அனைத்துலக அரசியல் அரங்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளார்.
இந்த சந்திப்பின் மூலம் இரஷியாவின் பக்கம் சாய கிம் ஜோங் முற்படுகிறார் என அனைத்துலக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
நேற்று வியாழக்கிழமை (ஏப்ரல் 25) முதன் முறையாக இரஷியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள விளாடிவோஸ்டோக் என்ற நகரில் புடினைச் சந்தித்தார் கிம் ஜோங். அவர்களுக்கிடையிலான சந்திப்பு சுமார் மூன்றரை மணி நேரம் நீடித்தது.
இன்று வெள்ளிக்கிழமை பிற்பகலில் பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய இரயிலில் புறப்பட்டு வடகொரியா திரும்பினார் கிம் ஜோங்.
இதற்கிடையில் ஹனோயில் டிரம்புடன் நடத்தப்பட்ட சந்திப்பில் அமெரிக்கா ‘கெட்ட எண்ணத்துடன்’ செயல்பட்டதாக புடினிடம் கிம் ஜோங் கூறியதாக வட கொரியாவின் அதிகாரத்துவ செய்தி ஏடு தெரிவித்துள்ளது.