Home நாடு பாலர் பள்ளி ஆசிரியர் ஊதிய சிக்கல் – தீர்வு காண மித்ரா கடும் முயற்சி

பாலர் பள்ளி ஆசிரியர் ஊதிய சிக்கல் – தீர்வு காண மித்ரா கடும் முயற்சி

1217
0
SHARE
Ad
சந்திப்புக் கூட்டத்தில் மித்ரா அதிகாரிகளுடன் இலெட்சுமணன்…

புத்ராஜெயா: பாலர் பள்ளி ஆசிரியர் சம்பள சிக்கலுக்கு உரிய முறையில் சரியான தீர்வு காண்பதற்கு மித்ரா சார்பில் அதிகபட்ச அளவில் முயற்சி முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதன் தலைமை இயக்குநர் இலெட்சுமணன் சண்முகம் தெரிவித்துள்ளார்.

இதன் தொடர்பில் மித்ரா தலைமையகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை, மே 17- பிற்பகலில் பாலர் பள்ளி பொறுப்பாளர்களுடன் நடைபெற்ற விளக்கக் கூட்டத்தில் மேற்கண்டவாறு குறிப்பிட்ட இலெட்சுமணன், பாலர் பள்ளிகளின் நிர்வாகத் தரப்பில் இருக்கும் ஒருசில பின்னடைவு நிலைமையையும் எடுத்துரைத்தார்.

பாலர் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை, ஆசிரியர்கள் மற்றும் உதவியாளர்களின் சரியான எண்ணிக்கை, பிப்ரவரி மாதத்திற்குப் பின்னர்தான் தெரிய வந்தது. சரியாக சொல்ல வேண்டும் என்றால், ஏப்ரல் மாத முதல் வாரத்தில்தான் முழு விவரம் மித்ரா’விற்குக் கிடைத்தது. அதன் பின்னர் பாலர் வகுப்பு ஆசிரியர்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்து நிதி அமைச்சகத்தின் தலைமைச் செயலாளரை அணுகியபோது, இப்படி பொத்தாம் பொதுவாக நிதி ஒதுக்கீடு செய்ய நிர்வாக நடைமுறை இடம் தராது என்று தெரிவிக்கப்பட்டது.

#TamilSchoolmychoice

கல்வி அமைச்சிடம் பதிவு பெறாத பாலர் பள்ளிகளுக்கு எவ்வாறு நிதி வழங்க முடியும்? பால மாணவர்களுக்கும் அவர்கள் பயிலும் வகுப்பறைக்கும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையில் பதிவு செய்ய வேண்டும் என்னும் விதியை பூர்த்தி செய்யாத பாலர் பள்ளிகளுக்கு எப்படி நிதி ஒதுக்க முடியும் என்றெல்லாம் ஏராளமான கேள்விகளை முன்வைத்து எல்லாவற்றையும் நிறைவேற்றிய பின் அணுகும்படி தெரிவிக்கப்பட்டது.

பாலர் பள்ளிகளின் தரப்பில் உள்ள எல்லா பின்னடைவையும் சீர் செய்ய மித்ரா சார்பில் அனைத்து முயற்சியும் மேற்கொள்ளப்படும். அதற்கிடையில், ஆசிரியர்களுக்கு தொகுப்பு ஊதியம் வழங்க இடைக்கால நிதி வழங்கும்படி மித்ரா சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. தவிர, இதில் புதிதாக ஒன்றும் இல்லை. கடந்த ஆண்டில்கூட இப்படி நிதி அளிக்கப்பட்ட விவரத்தை எடுத்துச் சொல்லி மித்ரா தரப்பில் வாதிட்டபோதும் சாதகமான பதில் இல்லை.

காரணம், அரசாங்க நிதி ஒதுக்கீட்டில் அரசியல் தலையீடு கூடாது. சம்பந்தப்பட்ட நிர்வாக அதிகாரிகள்தான் முடிவு செய்ய வேண்டும். தவிர, கடந்த 2017 செப்டம்பர் 14-ஆம் நாள் கோலாலம்பூர், டத்தோ கிராமாட் கிராமத்தில் அமைந்திருந்த டாருள் குரான் இத்திஃபாக்கியா தாபிஸ் பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டது. 23 உயிர்கள் பறிபோன அந்தப் பள்ளி முறையாக பதிவு பெறவில்லை; ‘பொம்பா’-வுடனும் பதிந்து கொள்ளவில்லை. இதன் தொடர்பில் அப்பொழுது எவ்வளவு சட்ட சிக்கல் எழுந்தன என்ற விவரத்தையும் நிதி அமைச்சக அதிகாரிகள் எடுத்துரைத்தனர்.

இதற்குப் பின்னர்தான் அனைத்துப் பாலர் பள்ளிகளும் உடனே கல்வி அமைச்சுடன் பதிந்து கொள்ள வேண்டும் என்றும் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையிலும் பதிந்து கொள்ள வேண்டும் என்றும் நடவடிக்கை மித்ரா சார்பில் முடுக்கிவிடப்பட்ட அதேவேளை, இடைக்கால நிவாரணமாக பாலர் பள்ளி ஆசிரியைகளுக்கும் உதவியாளர்களுக்கும் அவர்கள் பெரும்பாலும் குடும்பத் தலைவிகள் என்பதால் தொகுப்பு ஊதியம் வழங்க உதவி செய்யும்படி கோரிக்கை வைக்கப்பட்டது.

இதை நிதி அமைச்சகத்தின் துணைத் தலைமைச் செயலாளர் அரை மனதுடன் ஏற்றுக் கொண்ட நிலையில் அவர் முடிவு எடுப்பதற்குள் ஏப்ரல் 19-ஆம் நாள் பணியிடம் மாற்றப்பட்டார்.

புதிதாக வந்த நிதித் துறை துணைத் தலைமைச் செயலாளரிடம் மித்ரா சார்பில் நிலைமையை விளக்கி தீர்வு காண முயன்றபோது, இந்த விவகாரத்தில் ஒரு குழு அமைக்கப்பட்டு அக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில்தான் முடிவு எடுக்க முடியும். அதன் பிறகு எந்தச் சிக்கலும் இருக்காது. இந்திய சமுதாய பாலர் பள்ளிகளுக்கு தொடர்ந்து நிதி ஒதுக்கீடு தொய்வில்லாமல் வழங்கப்படும் என்ற உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

204 பாலர் பள்ளிகள், 257 பாலர் வகுப்பு ஆசிரியர்கள், 166 துணை ஆசிரியர்கள் சம்பந்தப்பட்ட இந்தச் சிக்கல் குறித்த விளக்கக் கூட்டத்தில் வட மலேசிய பாலர் பள்ளி ஆசிரியர் சங்கம், சைல்ட் அமைப்பு, தெய்வீக வாழ்க்கைச் சங்கம், மலேசிய இந்து சங்கம், சிறார் மேம்பாட்டு மைய ஒன்றியம் (பிபிபிகேகேசி) ஆகிய அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். மித்ரா தலைமை இயக்குநர் ச.லெட்சுமணன் தலைமையில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் துணை இயக்குநர் மகாலிங்கம், கல்விப் பிரிவு இயக்குநர் ஜெயக்குமார் ஆகியோரும் போதிய விளக்கத்தை அளித்தனர்.