சிரம்பான் – நேற்று முன்தினம் (வியாழக்கிழமை 23 மே) சிரம்பான் ஜெலுபு அருகே கட்டுப்பாட்டை இழந்த பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் ஐந்தாம் படிவ மாணவர் ஒருவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்த வேளை 22 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களுள் குவாலா கிளாவாங் மாரா இளநிலை அறிவியல் கல்லூரியைச் (எம்ஆர்எஸ்எம்) சேர்ந்த 6 மாணவர்களும் அடங்குவர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பந்தப்பட்ட மாணவர்களைப் புறநகர் மேம்பாட்டு துணையமைச்சர் ஆர். சிவராசா நேற்று (வெள்ளிக்கிழமை 26 மே) நேரில் சென்று கண்டார். அவர்களில் ஹாபிசுடின் பின் ஜெப்ரி ஜோன், ஜனகன் இராமதுரை, அம்மார் தாபிக், மகேந்திரன் ஆகிய நால்வர் குவாலா கிளாவாங் ஜெலுபு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மாணவர்களைச் நேரில் சந்தித்த துணையமைச்சர் அவர்கள் விரைவில் நலம்பெற ஊக்கமளித்த வேளையில் மாணவர்களில் உறவினர்களையும் சந்தித்தார். மேலும், இதே மருத்துவமனையில் சிகிக்சைப் பெற்று வரும் விபத்தில் காயமடைந்த குவாலா கிளாவாங் திறன்பயிற்சிக் கல்லூரி மாணவர்கள் இருவரையும் சந்தித்தார்.
தொடர்ந்து, சிரம்பான் NSCMH மருத்துவ மையத்தில் சிகிச்சைப் பெற்று வரும் மாணவி சர்வேஸ்வரியையும் துவாங்கு ஜபார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவி டாமியாவையும் துணையமைச்சர் நேரில் சென்று கண்டார்.
நேற்று முன்தினம் மாலை பேருந்து ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோதி, மற்றொரு வாகனத்துடன் விபத்துக்குள்ளானதாகவும் கடுமையான மோதலின் காரணமாக பேருந்து கவிழ நேர்ந்ததாகவும் தீயணைப்பு மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.